கர்நாடகா தேர்தல்: கோவா எதிர்க்கும் நீர் திட்டத்துக்கு ஒப்புதல் தந்த மத்திய அரசு!அடுத்தது மேகதாது?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கோவா கடுமையாக எதிர்த்து வரும் கலசா- பண்டூரி கால்வாய் திட்டத்துக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனை தேர்தல் நாடகம் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அதேநேரத்தில் தேர்தல் நெருங்குவதால் தமிழகத்துக்கு எதிராக மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுக்கக் கூடும் என்கிற அச்சமும் உருவாகி உள்ளது.
கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவின் அண்டை மாநிலங்களுடனான பல்வேறு பிரச்சனைகள் ஆளும் பாஜகவுக்கு சிக்கலாகவே இருந்து வருகிறது.
தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது அணை விவகாரம், மகாராஷ்டிராவுடன் எல்லை தகராறு, கோவாவுடன் கலசா- பண்டூரி திட்டமான மகதாயி நதிநீர் விவகாரங்கள் தொடந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் கர்நாடகாவின் 865 கிராமங்கள் எங்களுக்குதான் சொந்தம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் 865 கிராமங்களைக் கொண்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்கிறது மகாராஷ்டிரா.
இந்த நிலையில் மகதாயி நதிநீர் பிரச்சனையின் மையமான கலசா- பண்டூரி கால்வாய் திட்டத்துக்கு மத்திய பாஜக அரசு திடீரென ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் கோவா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. காவிரி நதிநீர் போல, மகதாயி நதிநீர் பிரச்சனையானது கர்நாடகா-மகாராஷ்டிரா- கோவா இடையேயானது. இதனால் காவிரி நடுவர் மன்றம் போல மகதாயி தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு நதிநீர் பங்கீடு அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவுக்கு 13.5 டிஎம்சி, கோவாவுக்கு 24 டிஎம்சி, மகாராஷ்டிராவுக்கு 1.30 டிஎம்சி நீர் பங்கீடு என ஒதுக்கப்பட்டது.

கர்நாடகா தமக்கான நதிநீர் பங்கீட்டின் அடிப்படையில் வடக்கு கர்நாடகா குடிநீர் தேவைக்காக கலசா- பண்டூரி கால்வாய் திட்டம் அமைக்க முயற்சித்தது. இது தொடர்பான கோப்பு மத்திய அரசிடம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. இத்திட்டத்தை கோவா கடுமையாக எதிர்த்தும் வந்தது. இந்த நிலையில் கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்வைத்து திடீரென கர்நாடகாவின் கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.
நீண்டகாலமாக கிடப்பில் இருந்த நதிநீர் திட்டத்துக்கு தேர்தலை முன்வைத்து மத்திய பாஜக அரசு ஒப்புதல் தந்துள்ளது. அதேபோல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா நீண்டகாலமாக முயற்சிக்கிறது. இதற்கு தமிழகம் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது. இப்போது கலசா - பண்டூரி திட்டத்தை போல மேகதாது அணை திட்டத்துக்கும் மத்திய பாஜக அரசு ஒப்புதல் தந்துவிடுவோம் என்கிற அச்ச்ம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications