இதுதான் சேஃப் பிளேஸ்! போட்டோ எடுத்து அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்! இந்த முறை 'அது' நடக்காது
பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா 25 எனும் விண்கலம் நிலவில் மோதியதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து சொன்னது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113x157 கி.மீ என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடத்தை லேண்டர் பொஷிஷன் டிடெக்ஷன் கேமிரா (LPDC) மூலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. இந்த படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது. கடந்த முறை 13 மீட்டர் உயரத்தில் பிரக்யான் ரோவர் இருக்கும்போது அதிலிருந்து எரிபொருள் அதிகமாக வந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இறங்க வேண்டிய இடத்தில் குழப்பம் உண்டானது. இந்த முறை இதுபோன்ற பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தரையிறங்கும் இடத்தை விக்ரம் லேண்டர் படமெடுத்து அனுப்பியுள்ளது. இந்த லேண்டர் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.














Click it and Unblock the Notifications