சித்தராமையா ராஜினாமா? விஸ்வரூபம் எடுக்கும் மூடா ஊழல் புகார்.. அவரே கொடுத்த பதில்! பரபர பிரஸ் மீட்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மூடா விவகாரம் இப்போது சித்தராமையாவுக்கு எதிராக மிகப் பெரியதாக வெடித்துள்ளது. அங்குள்ள எதிர்க்கட்சிகள் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இது அங்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
கர்நாடகாவில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் இருக்கிறது. இந்த வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
சித்தராமையா விளக்கம்: தனது அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ஒருபோதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை என்று கூறியுள்ளார். அமைச்சராக இருந்த போதும் இப்போது முதல்வராக இருக்கும் போதும் தனிப்பட்ட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பாஜக போராட்டத்தை நிராகரித்த அவர், "அரசியலில் கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்புதான்... இதனால் அவர்கள் போராட்டம் நடத்துவது என்றால் நடத்தட்டும்.. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் எனக்குக் கவலை இல்லை.
ரத்து செய்யப்படும்: நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது... இந்த விவகாரத்தில் நான் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளேன். அது விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதில் எனக்குச் சாதகமாகவே இடைக்கால நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன். ஆளுநர் எனக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதித்த வழக்கு நிச்சயம் ரத்து செய்யப்படும்" என்றார்.
மூடா விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்திருந்தார். அதை எதிர்த்தே கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று காலை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக சித்தராமையா தனது ட்விட்டரில் ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் சித்தராமையா ட்வீட் செய்திருந்தார். மேலும், எந்தவொரு தவறும் செய்யாததால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
சித்தராமையா சொல்வது என்ன: முன்னதாக இந்த மூடா வீட்டு மனை ஒதுக்கீடு குறித்தும் சித்தராமையா விளக்கமளித்திருந்தார். அதாவது தனது மனைவி பார்வதி பெயரிலான 3.14 ஏக்கர் நிலத்தை மூடா நிறுவனம்தான் ஆக்கிரமித்து இருந்தது என்றும் இதற்கு இழப்பீடாகவே 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் தழுவிய போராட்டம்: மேலும், ஆளுநர் விசாரணைக்கு அனுமதி அளித்ததற்கு எதிராகவும் காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தியது.. கர்நாடக ஆளுநருக்கு எதிராகத் தர்ணாக்கள், பாத யாத்திரைகள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் பாஜகவின் பொம்மையாக ஆளுநர் இருப்பதாக சித்தராமையா விமர்சித்துள்ளார். மறுபுறம் கர்நாடக ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயக படுகொலை என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications