ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது யார்? கர்நாடக அரசு, கிரிக்கெட் வாரியத்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
பெங்களூர்: பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கிரிக்கெட் வாரியமா எனவும், இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஐபிஎல், பிசிசிஐ, பெங்களூர் ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. நேற்று முன் தினம் அகமதாபாத்தில் போட்டி நடந்த நிலையில் அன்று இரவில் இருந்தே ஆர்சிபி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்சிபி வெற்றி விழா பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டது. முதலில் விதான் பவன் அருகே திறந்தவெளி பஸ்சில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் பின்னர் பேரணி ரத்து செய்யப்பட்டு, பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் வெற்றி விழா நடந்தது.
இந்த வெற்றி விழாவை கொண்டாட ஆர்சிபி ரசிகர்கள் படையெடுத்தனர். டிக்கெட் கிடையாது இலவசம் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வெறும் 35 ஆயிரம் பேர் கூடும் இடத்திற்கு லட்சக்கணக்கானோர் குவிந்தனர். மைதானம் மற்றும் மைதானத்துக்கு வெளியே என மொத்தம் 3 லட்சம் பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக ஆளும் காங்கிரஸ் கட்சியை இந்த விவகாரத்தில் சரமாரி கேள்வி எழுப்பியது. முழுமையான மற்றும் முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுத்ததே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் இன்று விசாரணை நடந்தது. இதில் தலைமை நீதிபதி காமேஷ்வர் ராவ், சி.எம்.ஜோஷி ஆகியோர் விசாரணை நடத்தினர். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "உள்ளூர் நபர்களை தவிர்த்து, வெளியூரில் இருந்து 2.50 லட்சம் பேர் கூடினர். இதனால் தான் நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மைதானத்தில் உள்ள 21 நுழைவு வாயில்கள் திறந்து இருந்தது. கேட் எண் 6, 7, 8 ஆகிய பகுதிகளில் தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், இந்த உயிரிழப்புகளை தடுத்து இருக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்று ஏற்படாமல் இருக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கர்நாடக கிரிக்கெட் வாரியமா எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது தொடர்பாக பெங்களூர் ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 10 அம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications