“டுவிஸ்ட்”.. முஷ்டி முறுக்கும் தலைகள்! கர்நாடக காங்கிரஸில் ஆரம்பித்ததா முதல்வர் பதவி கோஷ்டி மோதல்?
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதற்கான கோஷ்டி மோதல் இப்போதே ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியின் பதவிகாலம் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், கடந்த மே 10 ஆம் தேதி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து இருக்கிறது.

இதற்கிடையே தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றும், அதே நேரம் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரிவித்தன. டைம்ஸ் நவ், இந்தியா டுடே போன்ற கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸுக்கு முழு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் மேற்கொண்ட கள ஆய்வுபடி இம்முறை தங்கள் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகள், நம்பிக்கைகளில் எது உண்மையாகப் போகிறது? எது பொய்யாகப்போகிறது? என்பதெல்லாம் நாளை வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

நாளை காலை கர்நாடக மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கை போடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக வெற்றிபெறுவோம் என்று அதிக நம்பிக்கையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியில், இப்போதே அடுத்த முதலமைச்சர் யார் என்பதற்கான பேச்சுவார்த்தையும், கோஷ்டி பூசல்களும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பே அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் அமைச்சரும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டிகே சிவக்குமார் இடையே போட்டி தொடங்கிவிட்டது. இன்று மதியம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் சந்தித்து பேசி உள்ளார். இருவருக்குமே அம்மாநில காங்கிரஸிலும், மக்கள் மத்தியிலும் பலத்த ஆதரவு இருக்கிறது.

அதே நேரம் கடந்த தேர்தலில் சித்தராமையா தோல்வியடைந்த பிறகு அவர் அரசியலில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்ததாகவே தெரிந்தது. அதே நேரம் டிகே சிவக்குமாரோ, குமாரசாமியின் மஜதவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக அமைந்தார். 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகி குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடந்தபோதும் களத்தில் இறங்கி பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்களை செய்தவர் டிகே சிவக்குமார்தான்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போதும் சரி, கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப், ஹலால் சர்ச்சைகளின்போதும் சரி காங்கிரஸின் குரலாக ஒலித்தவர் டிகே சிவக்குமார். இந்த தேர்தல் பணிகளிலும் மாநில தலைவராக சுற்றி சுழன்று பணியாற்றி இருக்கிறார். அதே நேரம் சித்தராமையாவை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் என்ற இமேஜ் இருப்பதால் அவருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கலாம் என்று ஒரு தரப்பினர் பேசி வருகிறார்கள்.
#WATCH | Karnataka Congress president DK Shivakumar reaches party president Mallikarjun Kharge's residence in Bengaluru. pic.twitter.com/UJ3Ll9DB6z
— ANI (@ANI) May 12, 2023
ஆனால், சித்தராமையாவை பொறுத்தவரை ஆரம்பகால காங்கிரஸ்காரர் அல்ல. 2006 ஆம் ஆண்டில்தான் மஜதவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். ஆனால், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டிகே சிவக்குமார் போன்றோ ஆரம்பகாலத்தில் இருந்தே காங்கிரஸில் பயணித்தவர்கள்.
குறிப்பாக கர்நாடகாவில் மிகப்பெரிய சமூகங்களில் ஒன்றான வொக்காலிகர் ஜாதி அதிகம் கொண்ட தெற்கு பகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றால், அதை காட்டி தனக்கு முதலமைச்சர் பதவியை கே சிவக்குமார் கேட்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான விடைகள் அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications