நிலா யாருக்கு சொந்தம்? சந்திரயான் 3 தரையிறங்கியதும் இந்தியா உரிமை கொண்டாட முடியுமா? சுவாரசியம்
பெங்களூர்: சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கு நிலவு சொந்தமாகுமா? உண்மையில் நிலா யாருக்கு சொந்தமானது?, நிலா குறித்து சர்வதேச சட்டம் சொல்வது என்ன? நிலவுக்கு விண்கலத்தை உலக நாடுகள் போட்டிபோட்டு அனுப்புவதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்த பல சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
பூமியின் துணைகோள் நிலா. இதனால் தான் பூமியில் பிறந்த நமக்கும் நிலவுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. சிறுவயதில் நிலவை காட்டி அம்மாக்கள் உணவு ஊட்டி இருப்பார்கள். சிறுவயது குழந்தைகளுக்கும், நிலவுக்கும் இப்படியொரு தொடர்பு இருக்கும் அதேவேளையில் கவிஞர்கள் முதல் காதலர்கள் வரை நிலவை மையப்படுத்தி கவிதைகள் எழுதி வருகின்றனர்.

இதனால் தான் நிலவு என்பது அனைத்து தரப்பு மக்களின் மனதுக்கும் மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் நிலவில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா தரையிறங்கி உள்ளன. இந்தியா நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 2 திட்டம் மூலம் தரையிறங்க முயன்றது. இது இறுதிக்கட்டத்தில் பின்னடைவை சந்தித்தது.
இதையடுத்து சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. இதற்காக ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்த திட்டம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பூமியின் சுற்று வட்டபாதையை கடந்து நிலவின் சுற்று வட்டபாதைக்குள் சந்திரயான் 3 ப்ரோபல்ஷன் மாடூல் எனும் உந்துவிசை கலனில் இருந்து இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.
இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க உள்ளது. ஒருவேளை தரையிறங்குவதற்கான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ம் தேதியில் லேண்டர் தரையிறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. நிலவின் லேண்டர் தரையிறங்கிய பிறகு ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஆனால் இன்று திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில் தான் நிலா யாருக்கு சொந்தம்? இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் தரையிறங்கினால் இந்தியாவுக்கு நிலா சொந்தமாகுமா? நிலவில் நிலம் வாங்க முடியுமா? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் ஒவ்வொரு நாடுகளுக்கும் கடல் எல்லைகள் உள்ளன. மாறாக சில கடல்பகுதிகள் யாருக்கும் சொந்தமின்றி பொதுவாக உள்ளன. அதேபோல் தான் நிலா யாருக்கு சொந்தம்? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது நிலா என்பது அங்கு தரையிறங்கும் நாடுகளுக்கு சொந்தமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் உண்மை என்பது அப்படியில்லை.
நிலா என்பது யாருக்கு சொந்தம்? என்பதை 1967ல் உருவாக்கப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம்(Outer Space Treaty of 1967) தான் நிர்ணயம் செய்துள்ளது. இதில் இந்தியா உள்பட 100 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் என்பது நிலா என்பது அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை குறிப்பிட்ட நாடுகள் உரிமை கொண்டாட முடியாது. அதோடு நிலவை உலக நாடுகள் அனைத்தும் மனிதர்களின் நன்மைக்காக ஆய்வு செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
நிலவில் எந்த நாடுகள் தரையிறங்கி கொடியை நட்டு முத்திரையை பதித்தாலும் நிலவை யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது என இது உறுதியாக கூறுகிறது. இருப்பினும் சர்வதேச சட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட கூடியது. அதன்படி கடந்த 2019ல் இதுதொடர்பான 100க்கும் அதிகமான நாடுகளுடன் ஒப்பந்தம் என்பது கையெழுத்தானது. ஆனால் இன்னும் அது அங்கீகரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் விரைவில் இந்த ஒப்பந்தம் மற்றும் நிலவுக்கான சர்வதேச சட்டம் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது நிலவில் தரையிறங்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்டவை நிலவை உரிமை கொண்டாடும் வகையில் மாற்றம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் பல நாடுகளும் நிலவில் தரையிறங்க ஆர்வமாக உள்ளன. இது நிலவில் தரையிறங்குவதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியலாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் சந்திரயான் - 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் இன்று தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய 4வது நாடு எனவும், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனவும் இந்தியா பெருமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications