காவேரி எங்களுடையது.. தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் கன்னட அமைப்பினர்
பெங்களூர்: தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தரக் கர்நாடகா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் இன்று காலை முதல் #ಕಾವೇರಿನಮ್ಮದು என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகிறது. இதற்கு என்ன அர்த்தம். ஏன் இதை டிரெண்ட் செய்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. கர்நாடகாவின் இந்த நடவடிக்கையால் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்துள்ள தமிழக விவசாயிகள் பயிர்கள் என்னவாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்தாண்டு காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி நீரை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சில நாட்களில் நீர் தருவதைக் கர்நாடகா முழுமையாக நிறுத்தியது. இதற்கிடையே காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்திலும் 2ஆம் கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை வழங்கப் பரிந்துரைத்தது.
காவிரி: இந்த விவகாரம் குறித்த தொடரப்பட்ட வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டும் 5,000 கன அடி நீரை வேண்டும் என்ற பரிந்துரையை உறுதி செய்தது. இது டெல்டா விவசாயிகளுக்கு போதாது என்ற போதிலும், இந்த நீரை மட்டும் கர்நாடகா வழங்குகிறது. இருப்பினும், இதற்கும் கூட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என்று சொல்லி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், கர்நாடக அரசு பேருந்து ஓட்டுநர்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை பெங்களூர் முழுமையாக முடங்கிப் போகும். பெங்களூரில் இருக்கும் கல்வி நிறுவனங்களும் கூட மூடப்படும்.
கன்னட அமைப்பினர் முடிவு: பெங்களூரில் மட்டும் நாளை பந்த் நடக்கும் நிலையில், வரும் 29ஆம் தேதி கர்நாடக மாநிலம் முழுக்க பந்த் நடத்தவும் கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வட்டாள் நாகராஜ் பேசுகையில், "நாளை பெங்களூரில் போராட்டம் நடக்கட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு பந்த் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.. வரும் 29ஆம் தேதி இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்கும்" என்றார்.

இப்படி அடுத்தடுத்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த முறை பந்த் அறிவிக்கப்பட்ட போது, சாலையில் டூ வீலரில் சென்றவர்களை எல்லாம் பிடித்துத் தாக்கிய சம்பவங்கள் நடந்தன. அது தொடர்பான வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பி இருந்தது.
மேலும், கடந்த காலங்களில் இதுபோன்ற போராட்டங்களில் அங்குள்ள தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 1991இல் நடந்த தாக்குதல்களைச் சொல்லலாம். இதனால் அங்குள்ள தமிழர்களும் அச்சத்தில் உள்ளனர்.

டிரெண்டாகும் ஹேஷ்டேக்: இதற்கிடையே இந்த பந்த் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்போது சமூக வலைத்தளங்களில் இன்று காலை முதல் #ಕಾವೇರಿನಮ್ಮದು என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகிறது. இதற்கு என்ன அர்த்தம் என கேட்கிறீர்களா.. காவேரி நம்மது என்று இதற்குப் பொருள். அதாவது காவிரி எங்களுடையது என்று கர்நாடக அமைப்பினரும் நெட்டிசன்களும் இந்த ஹேஷ் டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், இதில் கன்னடா ஆதரவு போஸ்ட்கள் தான் நிரம்பி வழிகிறது.
காவிரி கர்நாடக மாநிலத்திற்கே சொந்தம் என்றும் இதை நிச்சயம் தர மாட்டோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், பாஜகவினர் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமாரை விமர்சித்தும் மீம்களை பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர் வட்டாள் நாகராஜின் சர்ச்சை பேச்சுக்களையும் இதில் பதிவிட்டு வருகின்றனர்.
பதில்: நேற்றைய தினம் எங்கள் காவிரி எங்கள் உரிமை என்ற ஹேஷ்டேக் டிரெண்டான நிலையில், அதற்கு பதிலடி கொடுக்வே கன்னட அமைப்பினர் இதை கையில் எடுத்துள்ளனர். எந்தவொரு நதி அல்லது ஆறாக இருந்தாலும், அது தோன்றும் இடத்தை காட்டிலும் அது பாயும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கே அதன் மீது உரிமை அதிகம். அப்படியிருக்கும் போது, காவிரி நீரைத் தர மறுத்து எதற்காக இப்படி காவிரி நம்மது என்றெல்லாம் சொல்லி வருவது சரியா என்றும் நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த காவிரி போராட்டங்களில் பெங்களூர் வாழ் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications