அந்த பெண் ஏன் அங்கே சென்றார்?.. மைசூரில் பெண் கூட்டு வன்புணர்வு.. கர்நாடக அமைச்சர் பகீர் கருத்து
பெங்களூர்: மைசூரில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் ஏன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இளம் பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள சாமுண்டி மலைப்பகுதியில் ஹெலிபேட் அருகே இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது. அங்கு கல்லூரி படிக்கும் மாணவி தனது காதலனுடன் வீடு திரும்பிய போது மர்ம கும்பல் ஒன்று காதலனை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
முதலில் மர்ம கும்பல் அந்த பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். பெண் பணம் கொடுக்க மறுத்த நிலையில், அவரின் காதலை அடித்து போட்டுவிட்டு , அங்கேயே அவரை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இந்த வன்புணர்வு வழக்கில் இரண்டு நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கருத்து
இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதில், இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க பார்க்கிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சி என்னை பதவி விலக சொல்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இந்த விவகாரத்தில் என்னை வன்கொடுமை செய்ய பார்க்கிறது. என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி அழுத்தம் தருகிறது.

சர்ச்சை
இந்த பாலியல் வன்கொடுமை ஆள் இல்லாத பகுதியில் நடந்து உள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத உட்பகுதி ஒன்றில் அந்த கும்பல் பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். அந்த பெண் ஏன் இப்படி ஒரு இடத்திற்கு சென்றார்.. அங்கு அவர் சென்று இருக்க கூடாது. இது போன்ற ஆள் நடமாட்டமே இல்லாத பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வதை அவர்கள் தவிர்த்து இருக்க வேண்டும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

விமர்சனம்
கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவின் இந்த கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வன்கொடுமையில் ஈடுப்பட்ட 6 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் யார் என்றும் துப்பு துலங்கவில்லை. போலீஸ் இதில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இப்படி இருக்கும் போது போலீசாரை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் உள்துறை அமைச்சர் இப்படி பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவா
முன்னதாக கோவாவில் இதேபோல் இரண்டு 14 வயது சிறுமிகள் குழு வன்புணர்வுக்கு உள்ளானார்கள். அப்போது கோவா முதல்வர் பிரமோத் சாவத், ஏன் 14 வயது சிறுமிகளை இரவு நேரத்தில் அவர்களின் பெற்றோர் வெளியே விடுகிறார்கள். ஏன் பீச்சுக்கு சிறுமிகளை அனுப்புகிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தார். பாலியல் வன்புணர்வை கண்டிக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அவர் பேசிய கருத்து பெரியளவில் சர்ச்சையான நிலையில் தற்போது கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவும் இதேபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications