படு ஜோராக ரெடியாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர்.. அடேங்கப்பா இவ்ளோ வசதிகளா.. மாஸ் பண்ணிட்டாங்க
பெங்களூர்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி பெங்களூரில் உள்ள BEML- ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் குளிப்பதற்கு சுடு தண்ணியுடன் கூடிய ஷவர் வசதி கூட இந்த ரயிலில் உள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது 77 வழித்தடங்களில் 51 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலும் சென்னை- நெல்லை, சென்னை- கோவை, சென்னை- பெங்களூர் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதி நவீன சொகுசு வசதி கொண்டது. முழுவதும் ஏசி வசதி, பயோ டாய்லட், தானியங்கி கதவு, நவீன பாதுகாப்பு அம்சங்கள் என ஹைடெக் வசதியுடன் இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதி கொண்டதுமே ஆகும். இதனால், தொலை தூரங்களுக்கு இயக்கும் வகையில் ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே முடிவு செய்தது.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி பெங்களூரில் உள்ள BEML- ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர், 11 ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட பெட்டிகள், இரண்டு அடுக்கு படுக்கை கொண்ட பெட்டிகள் 4, முதல் வகுப்பு, 1 முதல் வகுப்பு பெட்டி என மொத்தம் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு படுகை வசதி கொண்ட பெட்டியில் 611 படுக்கைகளும், இரண்டு அடுக்கு கோச்களில் 188 படுக்கைகளும், முதல் வகுப்பில் 24 படுக்கைகளும் உள்ளன.
இந்த ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வேகம் செல்லும் திறன் கொண்டது ஆகும். உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ரீடிங் லைட், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்ககாக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக டாய்லெட், படுக்கைகள் ஆகியவை உள்ளன.
முதல் வகுப்பு ஏசி பெட்டியில், பயணிகள் குளிப்பதற்கு சுடு தண்ணியுடன் கூடிய ஷவர் வசதி ஆகியவை உள்ளன. பெங்களூரில் உள்ள பிஇஎம்எல். ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதை ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க தருணம். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், இந்திய ரயில் தண்டவாளங்களில் ஓட தயாராக உள்ளன. பயணிகளுக்கு உலக தரம் வாய்ந்த பயண அனுபவத்தை இந்த ரயில் கொடுக்கும்” என்றார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியின் படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications