காதலை ஏற்க மாட்டியா? 17 வயது சிறுமியை துரத்தி.. ஆசிட் வீசிய இளைஞர்.. பெங்களூரில் பயங்கரம்
சிறுமியின் இடது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெங்களுர்: கர்நாடகாவில் தனது காதலை ஏற்காததால் 17 வயது சிறுமி மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராமநகரம் மாவட்டத்தின் கனகபுரா பகுதியில் சுமந்த்(22) எனும் இளைஞர் வசித்து வருகிறார். மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் கடந்த சில நாட்களாக இதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுமந்த் சிறுமியை காதலிக்க தொடங்கியுள்ளார். தனது ஒருதலை காதலை சிறுமியிடம் தெரிவிக்க, சிறுமியோ இதனை ஏற்காமல் மறுத்திருக்கிறார். சுமந்தால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எனவே தொடர்ந்து சிறுமியை நச்சரித்து வந்திருக்கிறார். சிறுமி வீட்டை விட்டு வரும்போதும் போகும்போதும் சுமந்த் தனது விருப்பத்தை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் டென்ஷனான சிறுமி சுமந்துக்கு பதில் சொல்வதை நிறுத்திவிட்டு தான் உண்டு தனது வேலை உண்டு என எதையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். இப்படி இருக்கையில் நேற்று தனது தம்பியுடன் கடைக்கு வந்திருக்கிறார். இதனை பார்த்த சுமந்த் அவர்கள் பின்னாலேயே சென்றிருக்கிறார்.

ஆசிட் வீச்சு
சிறுமி கடையிலிருந்து திரும்பி வரும்போது பைக்கில் அவரை வழிமறித்து, "உங்கூட கொஞ்சம் பேசனும், பைபாஸ் வரைக்கும் வா" என்று கூறியுள்ளார். ஆனால் சிறுமி அதெல்லாம் வரமுடியாது என்று கூறவே, சுமந்த் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சிறுமியின் முகத்தில் வீசியுள்ளார். சிறுமி வலியில் கதற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட சுமந்த் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பொதுமக்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் சொன்னது என்ன?
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், "ஆசிட் இடது கண், தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியை பலமாக தாக்கியுள்ளது. கண் விழி கடுமையாக சேதமடைந்துள்ளதால் சிறுமியாமல் கண்களை திறக்க முடியவில்லை. எங்களால் முந்த அளவுக்கு நாங்கள் முயன்று வருகிறோம். எப்படி இருப்பினும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மற்றபடி உயிருக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை" என்று கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த சுமந்தை அவரது நண்பர் வீட்டில் வைத்து பொலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது ஐபிசி பிரிவு 326ஏ மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்
இது குறித்து ராமநகர் எஸ்பி கார்த்திக் ரெட்டி கூறுகையில், "சுமந்த்தான் தன் மீது ஆசிட் வீசினார் என்று சிறுமி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவர் பயன்படுத்திய ஆசிட் என்ன வகை என்பது குறித்து அறிய மாதரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதேபோல குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆசிட் எங்கிருந்து பெறப்பட்டது? இதனை வாங்க யார் உதவியாக இருந்தது? இந்த திட்டத்திற்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? எனும் கோணத்தில் விசாரித்து வருகிறோம். முதல் கட்ட விசாரணை நிறைவுற்றுள்ளது. இக்குற்றத்திற்கு நேரடி சாட்சி சிறுமியின் தம்பிதான்" என்று கூறியுள்ளார்.

நேரடி சாட்சி
சம்பவம் குறித்து சிறுமியின் தம்பி கூறுகையில், "சுமந்த் நீண்ட நாட்களாக அக்காவை தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அக்கா பலமுறை சுமந்தை திட்டியிருக்கிறார். சம்பவத்தன்று அக்காவை தனியாக பேச வேண்டும் என்று பைபாஸ் அருகே சுமந்த் அழைத்தார். ஆனால் அக்கா செல்லவில்லை. இதனால் கோபமடைந்த சுமந்த் திடீரென பையிலிருந்து எதையோ எடுத்து அக்கா மீது வீசினார். அக்கா அதே இடத்தில் துடி துடித்து கீழே விழுந்துவிட்டார்" என்று கூறியுள்ளார். பட்டப்பகலில் சிறுமி மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications