தங்கத்தை ஓவர்டேக் செய்யும் பிட்காயின்.. ஒரு கோடி ரூபாயை தாண்டியது! மொத்தமாக அள்ளும் முதலீட்டாளர்கள்
வாஷிங்டன்: இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதற்குச் சர்வதேச சூழல், பொருளாதாரக் குழப்பம் எனப் பல காரணங்கள் உள்ளன. இதற்கிடையே தங்கத்தை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பிட்காயின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பிட்காயின் ஒரு கோடியை ரூபாயை தாண்டிய நிலையில், இன்றைய தினம் வர்த்தகத்தில் வெறும் 5 நிமிடத்தில் அதன் மதிப்பு ரூ.86,000 அதிகரித்துள்ளது.
இப்போது சர்வதேச பொருளாதாரத்தில் அடிக்கடி பெரிய மாற்றங்கள் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் தான். டிரம்பின் வர்த்தகக் கொள்கையால் ஏற்படும் சர்வதேச நிச்சயமற்ற நிலையால் பொருளாதாரம் தடுமாறி வருகிறது. முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம் என யோசித்தே வருகிறார்கள். தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது.

பிட்காயின் முதலீடுகள்
அதேநேரம் தங்கத்தைத் தாண்டியும் பிட்காயின் முதலீடுகள் தாறுமாறாக உயர்ந்துள்ளது என்றே சொல்லலாம். முதலீட்டாளர்கள் பார்வை பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளதால் அது இப்போது 1 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. அமெரிக்கச் சந்தையில் இப்போது பிட்காயின் 3.60% உயர்ந்து 1,22,175 டாலரில் உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.05 லட்சமாக இருக்கிறது.
இது தொடர்பாக முட்ரெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எடுல் படேல் கூறுகையில், "முதலீட்டாளர்கள் பிட்காயினை தொடர்ந்து வாங்கி வருகிறார்கள். பெரிய முதலீட்டாளர்கள் பிட்காயின்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த வாரம் மட்டும் கிரிப்டோ முதலீடு $1.52 பில்லியனாக இருந்தது" என்றார்.
எல்லமே உயர்ந்தது
பிட்காயின் மட்டுமின்றி மாற்று காயின்களான Ethereum மற்றும் Solana உள்ளிட்ட முக்கிய ஆல்ட்காயின்களும் 10% வரை உயர்ந்தன. பிட்காயின் மட்டுமின்றி அனைத்து காயின்களும் உயர்ந்து வருவதையே காட்டுகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் முதலீட்டாளர்கள் பிட்காயின் ETF-களில் $1.2 பில்லியன் முதலீடுகள் வந்துள்ளன. வரும் காலங்களிலும் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வெறும் 5 நிமிடத்தில்
இன்றைய தினம் பிட்காயின் வெறும் 5 நிமிடத்தில் ரூ.86,000 அதிகரித்தது. இப்போது அதன் மதிப்பு ரூ.1.05 கோடியாக இருக்கிறது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். பிட்காயின் விலை இந்தளவுக்கு அதிகரிக்க இதற்குச் சில முக்கிய காரணங்கள் இருக்கிறது. அதில் பிரதானக் காரணமே டிரம்பின் நிலைப்பாடு தான்.
இதற்கு முன்பு இருந்த பைடன் அரசு க்ரிப்டோவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தது. க்ரிப்டோ சந்தையைக் கட்டுப்படுத்தவும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவுமே தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், டிரம்ப் வந்த பிறகு நிலைமை மாறியது. அவர் க்ரிப்டோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். அதிபரான பிறகே அவரே தன் பெயரிலும் தனது மனைவி மெலினியா பெயரிலும் க்ரிப்டோ வெளியிட்டிருந்தார்.
காரணங்கள் என்ன
மேலும், கடந்த மார்ச் 6ஆம் தேதி பிட்காயின்களையும் அமெரிக்கா ரிசர்வில் சேர்க்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இது மிக முக்கியமான ஒரு உத்தரவாகப் பார்க்கப்பட்டது. இது மக்களிடையேயும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை அதிகரிப்பதாகவே இருக்கிறது. இதைத் தொடர்ந்து பல அமைப்புகளும் நிறுவனங்களும் நாடுகளும் கூட கிரிப்டோ ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்க டாலர் மதிப்பும் இந்தாண்டு 10% வரை சரிந்துள்ளது. டிரம்பின் பிக் பியூட்டிபுல் பில் காரணமாக டாலர் மதிப்பு மேலும் சரியும். அப்போது பிட்காயின் மதிப்பும் கூட மேலும் உயர்ந்து புதிய உச்சத்திற்குப் போகும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications