மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த நாள் நெருங்குது.. அமெரிக்கா கிரீன் சிக்னல்.. மத்திய அரசு குட் நியூஸ்
டெல்லி: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை எதிர்த்த அமெரிக்கா, அதற்காக இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பரஸ்பவரி 25 சதவீதமும், எண்ணெய் வாங்கியதற்காக ஒரு 25 சதவீதம் வரியும் என 50 சதவீதம் வரி விதித்தார். இதனால் வர்த்தகம் இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை தன்னுடைய பணத்தை மிகப்பெரிய அளவில் இழக்க கச்சா எண்ணெய் இறக்குமதி தான் முக்கிய காரணமாக உள்ளது. டாலரில் தான் கச்சா எண்ணெய் வாங்குவதால், அதன் மதிப்பை பொறுத்து கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதும் குறைவதும் நடக்கிறது. ஆனால் கடந்த 50 வருடங்களில் டாலர் விலை தொடர்ந்து அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது.

கச்சா எண்ணெய்
இதனால் அதிகப்படியான பணத்தை கச்சா எண்ணெய் வாங்க செலவு செய்கிறது. இதுதான் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரமே கச்சா எண்ணெய் இறக்குமதியை மையமாக வைத்து தான் சூழலுக்கிறது.. இந்தியாவிடம் எல்லா வளமும் இருந்தாலும் எண்ணெய் வளம் போதிய அளவில் இல்லை. அதனை அரபு நாடுகளிடமும், ரஷ்யாவிடமும் இந்தியா வாங்குவது தொடர்கிறது.
40 சதவீதம் அதிகரிப்பு
வழக்கமாக பல்வேறு நாடுகளிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது என்றாலும், உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது கிடுகிடுவென உயர்ந்தது. மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே ரஷியாவிடம் வாங்கி வந்த இந்தியா, திடீரென 40 சதவீதமாக உயர்த்தியது.
54 லட்சம் பீப்பாய்
உக்ரைன் போரை முன்வைத்து, ரஷியா மீது பொருளாதார தடைகளை மேற்கு நாடுகள் எடுத்ததால், ரஷியா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை அதிகமான தள்ளுபடி கொடுத்து விற்க தொடங்கியது. அதனால் இந்தியா தனது கொள்முதலை அதிகரித்திருந்தது. இதனை ஆரம்பம் முதலே அமெரிக்கா கண்டித்தது. ஆனால் இந்தியா இதனை ஏற்கவில்லை.. நாள் ஒன்றுக்கு 54 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தொடங்கியது.
டிரம்ப் குற்றச்சாட்டு
இந்நிலையில் தள்ளுபடி விலையில் ரஷிய கச்சா எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரித்து, பிற நாடுகளுக்கு அதிக விலையில் பெட்ரோல், டீசலாக விற்று இந்தியா கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகவே குற்றம் சாட்டி வருகிறார். அந்த பணம் தான் உக்ரைன் போர் முடியாமல் போக காரணம் என்றும் குற்றம்சாட்டினார்,..
50 சதவீதம் வரி
அதனால் முதலில் மிரட்டிய டிரம்ப், பின்னர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பரம் வரி விதிக்கப்பட்டது. அத்துடன் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரியை விதித்து அதிரடி காட்டி உள்ளார்.
பல ஆயிரம் கோடி பாதிப்பு
இந்த வரிவிதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் எல்லா மாநிலங்களிலும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடல் உணவு ஏற்றுமதி, ஜவுளி, நகை ஏற்றுமதி, என்ஜினிரியங் பொருட்கள் போன்ற துறைகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா பேச்சுவார்த்தை
இதனிடையே டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு மத்தியில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. இதில் முதற்கட்ட ஒப்பந்தத்துக்காக 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்தன. மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் அமெரிக்கா சென்று 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
வர்த்தக ஒப்பந்தம்
அதாவது இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு மிக அருகில் இருப்பதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஒப்பந்தத்தின் வடிவத்தை இரு தரப்பினரும் உருவாக்கி வருவதாகவும் கூறினார்கள். இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் புதிய பிரச்சனைகள் எதுவும் தடையாக இப்போது இல்லை. பெரும்பாலான விஷயங்களில் நாங்கள் ஒன்றிணைகிறோம். பல்வேறு விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது. தீர்வு காண்பதற்காக இனி அதிக அதிருப்தி எதுவும் இல்லை என்று கூறினார்கள்.
அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
முன்னதாக இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அமெரிக்காவுடன் நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இரு நாட்டு வர்த்தகத்தை தற்போதைய 191 பில்லியன் டாலரில் இருந்து 500 பில்லியன் டாலராக அதிகரிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக இந்தியா வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications