தென்னிந்தியா தேய்ந்து.. வட இந்தியா வளர்கிறது.. Delimitation மூலம் நடக்கும் பெரும் இழப்பு
நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கும் கூட்டத்தில் அரசியல் சட்ட (131-வது) திருத்த மசோதா மற்றும் டெலிமிடேஷன் மசோதா விவாதிக்கப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நிறைவேறினால் லோக்சபா மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நீண்டகால கோரிக்கை நிறைவேறும்.
ஆனால் இந்த மாற்றம் தென் இந்திய மாநிலங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா இடங்களை மறுபங்கீடு செய்யும் திட்டம் மூலம் தென் மாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் குறைக்கும் நிலை உள்ளது.

அரசியல் சட்ட (131-வது) திருத்த மசோதா தற்போது இருக்கும் 550 லோக்சாப இடங்கள் 850 ஆக உயரும், இதனால் நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் கூடுதலான இடங்களை 2011 மக்கள் தொகை அடிப்படையில் பெறும். ஆனால் மொத்தமாக கணக்கிடும் போது தென் மாநிலங்களின் மொத்த லோக்சபா இடங்கள் பங்கீடு தற்போது இருக்கும் 24.3% இலிருந்து 20.7% ஆக குறையும்.
இந்த ஆதிக்கம் குறையும் பட்சத்தில் நிதி ஆணைய முடிவுகள், ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளில் தென் மாநிலங்களின் ஆதிக்கம் குறையும் என்ற அச்சம் உள்ளது. ஆனால் பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது 5 தென் மாநிலங்களின் பங்கீடு இந்திய ஜிடிபி-யில் 3ல் ஒரு பங்காக உள்ளது, ஆனால் நாடாளுமன்றத்தில் பங்கீடு மட்டும் 20 சதவீதமாக குறைகிறது. இதன் மூலம் தென் மாநிலங்களின் உழைப்பில் வட மாநிலங்கள் செல்வ செழிப்புடன் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதை எதிர்த்து தான் இன்று கருப்புக் கொடி போராட்டத்தையும் திமுக நடத்துகிறது. இந்த போராட்டம் திமுகவை பற்றியது இல்லை என்றும் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியது என்றும் முக.ஸ்டாலின் கூறினார். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முயற்சியை மிகக் கடுமையான விமர்சனம் செய்யும் தலைவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.
தென் மாநிலங்களின் கவலை
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய ஐந்து தென் மாநிலங்கள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் இந்த மாநிலங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் மற்ற பகுதிகளை விட பெரிய அளவில் முன்னேறியுள்ளன.
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு லோக்சபா இடங்கள் குறையும் அபாயம் இந்த தொகுதி மறுவரையறை மசோதா மூலம் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இந்த திட்டத்தை "வரலாற்று பெரும் அநீதி" என்று விமர்சித்துள்ளார். "இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்த தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுக்கிறதா?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் இந்தியாவின் பொருளாதார பங்களிப்பு
தென் மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 31 சதவீதம் பங்களிக்கின்றன. 2025 நிதியாண்டில் தென்னிந்தியாவை காட்டிலும் வடஇந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே தேசிய பொருளாதார பங்கீட்டில் 27 சதவீதத்தை அளிக்கின்றன.
தனிநபர் வருமானம்
தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதார பங்கீட்டில் முன்னிலை வகிப்பது மட்டும் அல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவுகளைத் தாண்டி, மக்களின் வாழ்வாதார வளர்ச்சியிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. 2025 நிதியாண்டில் தனிநபர் வருமான தரவுகளில் தெலங்கானா (₹3.88 லட்சம்), கர்நாடகா (₹3.81 லட்சம்) மற்றும் தமிழ்நாடு (₹3.62 லட்சம்) முன்னிலையில் உள்ளன. இது பொருளாதாரத்தில் அதிக பங்கீட்டை கொண்ட மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிராவில் ரூ.3.09 லட்சத்தை விட அதிகமாகும்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று தென் மாநிலங்களும் ஆண்டு தோறும் 6%க்கும் மேல் தனிநபர் வருமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதனால், இந்த வளர்ச்சி வெறும் எண்ணிக்கைகளில் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் உண்மையான முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது.
செலவின பங்கீடு
மற்றொரு புறம், முதலீட்டு செலவினங்களில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இணைந்து சுமார் 30% பங்கைக் கொண்டுள்ளன. முதல் 10 மாநிலங்கள் சேர்த்து மொத்த மூலதன செலவினங்களில் 67% பங்களிப்பை வழங்குகின்றன. தொழில்துறை கடனளிப்பிலும் சமநிலை இல்லை; மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் தலா 34% வீதம் அதிக பங்கைக் கொண்டுள்ளன.
இத்தகைய நிலையில் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களுக்கான உரிமை விட்டுகொடுத்தால் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலை ஏற்படும். இது ஒவ்வொரு தென் மாநிலத்திற்கும் பெரும் பாதிப்பு.
இருப்பினும், லோக்சபா இடங்களை மக்கள் தொகை அடிப்படையில் மறுபங்கீடு செய்யும் திட்டம் தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது என முதல்வர் ஸ்டாலின் உட்பட தென்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தற்போதைய நடைமுறையில் மத்திய கொள்கைகள், வரி பகிர்வு, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் தென் மாநிலங்களின் குரல் பலவீனமடையும் அபாயம் உள்ளது.
முக்கியமான கேள்வி
அடுத்த முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த தொகுதி மறுவரையறை செயல்முறை ஏன் 2011 தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதாகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஏன் 15 ஆண்டுகள் பழைய தரவுகளை நம்பி லோக்சபாவில் இடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்திய மக்கள்தொகை 2027 கணக்கெடுப்பு, 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் சுய கணக்கெடுப்பு நடைபெறும். முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த இரண்டு கட்ட செயல்முறை 2027 மார்ச் வரை நீடிக்கும். இறுதி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். இதில் மக்கள்தொகை, வீடமைப்பு மற்றும் சாதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படும்.
அரசின் விளக்கம்
மத்திய அரசு இந்த மசோதாக்களை பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக கொண்டு வருவதாகக் கூறுகிறது. தற்போது லோக்சபாவில் 543 இடங்களில் பெண்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே உள்ளனர். புதிய மாற்றத்தால் இது சுமார் 33 சதவீதமாக உயரும்.
லோக்சபா இடங்களை 543-லிருந்து சுமார் 850 ஆக அதிகரிக்கும் திட்டம் உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இடங்களை மறுபங்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2027-ல் நடைபெறும் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக காத்திருந்தால் பெண்கள் இட ஒதுக்கீடு 2029-க்குப் பிறகு தான் நடைமுறைக்கு வரும் என்று அரசு விளக்குகிறது. எனவே 2011 தரவுகளைப் பயன்படுத்தி விரைவாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
தென் மாநிலங்களின் கோரிக்கை
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த புதிய தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கக் கோரியுள்ளன. இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, காரணம் பொருளாதார வளர்ச்சியிலும், வேவைவாய்ப்பில் கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த 5 மாநிலங்களை ஓரம்கட்டிவிட்டு, மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களுக்கு அதிக இடங்களை நாடாளுமன்றத்தில் அளிப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளது.















Click it and Unblock the Notifications