2018 முதல் புது நிதியாண்டு... நவம்பரில் பட்ஜெட் - மத்திய அரசின் மாஸ்டர் பிளான்
2018ம் ஆண்டிலிருந்து நிதி ஆண்டு முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் நிதி ஆண்டு கணக்கு முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக வரும் நவம்பர் மாதமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 26 ஆண்டுகளாக நிதி ஆண்டு கணக்கு முறையானது ஏப்ரல் முதல் மார்ச் வரையில் உள்ளது. இந்த நிதி ஆண்டு கணக்கு முறை பிரிட்டனின் நடைமுறையினை பின்பற்றி பயன்படுத்தி வரும் முறையாகும்.
அதுபோலவே, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஏப்ரல் முதல் மார்ச் வரையில் நிதி ஆண்டு கணக்கு முறையானது வழக்கத்தில உள்ளது.

நிதியாண்டு கணக்கு
பெரும்பாலான நாடுகளில் ஜனவரி முதல் டிசம்பர் வரைதான் நிதி ஆண்டு கணக்கு முறையானது நடைமுறையில் உள்ளது. எனவே இந்தியாவும் இந்த நடைமுறையினை பின்பற்றி வரும் வரும் 2018ம் ஆண்டிலிருந்து ஜனவரி முதல் டிசம்பர் வரை நிதி ஆண்டு கணக்கு முறையினை அமல்படுத்த உள்ளது.

சுதந்திர இந்தியா
இந்தியாவில், 1867ம் ஆண்டு வரையில் நிதி ஆண்டு கணக்கானது மே 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரைதான் கணக்கிடப்பட்டு வந்தது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் 1867ம் ஆண்டு முதல் 1947 சுதந்திரம் அடையும் வரையில், நிதி ஆண்டு கணக்கானது ஏப்ரல் முதல் மார்ச் வரையில் கணக்கிடப்பட்டு வந்தது. அதன் பின்னர் சுதந்திர இந்தியாவில் 1988ம் ஆண்டு வரையில் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நிதி ஆண்டு கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையில் இருந்தது

ஏப்ரல் முதல் மார்ச்
அதன்பின்னர், 1989ம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் நிதி ஆண்டுக் கணக்கானது ஏப்ரல் முதல் மார்ச் வரையில் கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது, இதுவும் மாற்றப்பட்டு மீண்டும் நிதி ஆண்டு கணக்கானது ஜனவரி முதல் டிசம்பர் வரை என்ற பழைய நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட இருக்கின்றது.

நவம்பரில் பட்ஜெட்
இதற்கு முன்னேற்பாடாக, வரும் நவம்பர் மாதமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துவருவதாகவும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாறும் நடைமுறை
இதன்மூலம் சுமார் 26 ஆண்டுகலாக வருடந்தோரும் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டுவந்த பட்ஜெட் நடைமுறையானது மாற்றப்பட்டு இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பரில் பட்ஜெட் கூட்டத்தொடர்
நவம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி மசோதா நிறைவேற்றப்படும். வரவு செலவுத் திட்டத்தை வரைவு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications