நாளை உடனே கடைக்கு ஓடுங்க.. சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இனி குறைய சான்ஸ் கம்மி!
சென்னை: மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. டிரம்ப் வந்து இஷ்டத்திற்குத் தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருக்கத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. கடந்த மாதம் தான் தங்கம் விலை கொஞ்சம் நிலையாக இருந்தது. இதற்கிடையே இப்போது மீண்டும் அது எகிற ஆரம்பித்துவிட்டது.

இஸ்ரேல் ஈரான் மோதல்
இஸ்ரேல் ஈரான் மோதலே இதற்குப் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. இன்று காலை ஈரான் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேல் ஈரான் விவகாரம் வரும் நாட்களிலும் பெரிதாக வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இதன் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை உச்சம்
குறிப்பாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று உச்சத்திற்குப் பறந்துள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் கோல்ட் எனப்படும் தங்கத்தின் விலை 1.27% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $3,427ஆக இருக்கிறது.. அதாவது இந்திய மதிப்பில் பார்த்தோம் என்றால் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9486ஆக இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதிக்குப் பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொடுவது இதுவே முதல்முறை. இந்த வாரம் மட்டும் தங்கம் விலை 3.3% மேல் உயர்ந்துள்ளது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 1.3% உயர்ந்து 3,430 டாலராக உள்ளது. அதாவது கோல்ட் ப்யூச்சர்ஸில் இந்திய மதிப்பில் பார்த்தோம் என்றால் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9500ஐ தொட்டுள்ளது.
ஈரான் பதிலடி
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணு உலைகள், ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவ தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக கொள்கைகளால் ஏற்கனவே மார்கெட்டில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஜூலியஸ் பேர் வங்கியின் ஆய்வாளர் கார்ஸ்டன் மென்கே கூறுகையில், "தற்போதைய தாக்குதல்கள் தங்கத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.. இந்த அதிர்ச்சி தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டால், அது பிராந்தியத்தில் மோதல் தீவிரப்படுத்தும். இதனால் தங்கம் விலை மேலும் உயரக்கூடும்" என்றார்.
தங்கம் விலை கம்மியாக சான்ஸ் குறைவு
பொதுவாக அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவும் காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் வட்டி குறைக்கப்பட்டாலும் தங்கம் விலை உயரும். இப்போது இஸ்ரேல் ஈரான் இடையே நேரடியாகவே மோதல் வெடித்துள்ள நிலையில், தங்கம் விலை உயரவே செய்யும். இது தொடர்பாக காமெர்ஸ்பேங்க் வெளியிட்ட குறிப்பில், "இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $3,400 ஆகவும், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் $3,600 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் விவகாரம் எப்படிப் போகிறது என்பது தங்கம் விலையைக் கணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏற்கனவே இன்று சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், நாளை இந்தியச் சந்தையிலும் அது எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications