டிரம்பால் முன்கூட்டியே வந்த தீபாவளி.. தங்கம் விலை இனி சரியும்! தெளிவாக சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாகத் தங்கம் விலை குறையும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த மோதல் சீக்கிரமே முடிந்துவிட்டதால் தங்கம் விலை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை குறைய என்ன காரணம்.. இது தொடருமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 13ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடத்தியது. அதில் ஈரானின் டாப் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் எனப் பலரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியை ஈரான் ஆரம்பித்தது. இஸ்ரேல் மீது பல நகரங்களில் தொடர்ச்சியாகக் குண்டுகளை வீசியன. இப்படி மாறி மாறி இரு நாடுகளுமே தாக்குதல் நடத்தி வந்தன.

முடிவுக்கு வந்த மோதல்
இந்த தாக்குதலே 10 நாட்கள் நீடித்தது. இந்தச் சூழலில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்தது. அமெரிக்காவின் ஸ்டெல்த் விமானங்கள் மூலம் ஈரானின் மூன்று அணு சக்தி நிலையங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்ததால் பதற்றம் உச்சக்கட்டத்திற்குச் சென்றது.
இதனால் மோதல் தீவிரமடையும்.. கச்சா எண்ணெய், தங்கம் விலை என்றே பலரும் எதிர்பார்த்தனர்.. ஆனால், சில மணி நேரத்தில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. நேற்று காலை இந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்தார். அதன் பிறகு இரு தரப்பும் சிறு சிறு தாக்குதலை நடத்தினாலும் அது பெரிய மோதலாக மாறவில்லை. மறுபுறம் தங்கம் விலையும் சரி கச்சா எண்ணெய் விலையும் சரி ஏற்கனவே சரிய ஆரம்பித்துவிட்டது.
ஆனந்த் சீனிவாசன்
குறிப்பாகத் தங்கம் விலை நேற்று கணிசமாகவே குறைந்திருந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் 680 ரூபாய் குறைந்தது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,070க்கு விற்பனை.
தங்கம் விலை இதுபோலவே தொடர்ந்து குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
டிரம்பால் வந்த தீபாவளி
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "டிரம்ப் இந்தாண்டு தீபாவளியை முன்கூட்டியே கொண்டு வந்துவிட்டார். இதனால் நாம் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். டிரம்ப் செய்த காரியத்தால் பங்குச்சந்தை ஏற்கனவே உயர ஆரம்பித்துவிட்டது. டிரம்பால் அமெரிக்கா மட்டுமின்றி, உலகளவில் பங்குச்சந்தை ஏறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துவிட்டது. டாலர் மதிப்பும் உயர்ந்துவிட்டது.
நாங்கள் குண்டு போட்டோம்.. இப்போது எல்லாம் சரியாகப் போய்விட்டது என டிரம்ப் சொல்லி இருக்கிறார். மேலும், இஸ்ரேல் ஈரான் இனி தாக்குதல் நடத்தாது என்று டிரம்ப் கூறினார். இந்த அறிவிப்பு வந்த உடனேயே முதலில் ஈரான் தான் ஒப்புக் கொண்டது. எங்களைத் தாக்கவில்லை என்றால் திரும்பத் தாக்க மாட்டோம் என ஈரான் கூறியது. இஸ்ரேல் தாமதமாக வந்தாலும், அவர்களும் தேவையான இலக்கை அடைந்ததால் போர் நிறுத்தம் விட்டது. குண்டு போட மாட்டோம் எனச் சொல்லிவிட்டார்கள். இதன் மூலம் இந்த 12 நாள் போர் முடிந்தது.
எல்லாம் ஓவர்
அதாவது இனிமேல் இஸ்ரேல் குண்டு போடாது. ஈரான் திரும்ப அடிக்காது.. அமெரிக்காவும் மூன்று குண்டுகளைப் போட்டுவிட்டது. இதனால் ஈரானுக்கு என்ன ஆனது? எவ்வளவு அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்பது குறித்த டேட்டா எல்லாம் நமக்கு இன்னும் வரவில்லை. ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது மோதல் முடிந்துவிட்டது.
இதனால் கச்சா எண்ணெய் சரிய ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலையும் கொஞ்சம் குறைகிறது. இதனால் டாலர் மதிப்பும் அதிகரித்தது. ஆனால், ஜூலை மாதமே வட்டி விகிதம் குறைக்கலாம் என அமெரிக்க பெடரல் ரிசர்வ் சொன்னதால் டாலர் மதிப்பு ரொம்ப அதிகரிக்கவில்லை. இந்த சூழலில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. ரூ.200- 300 வரை கூட குறையலாம். கச்சா எண்ணெய் விலையும் குறையும். இது இந்தியாவுக்கு நல்ல செய்தி" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications