"தங்கத்தை மட்டும் வாங்காதீர்கள்!" ஒரு நொடி ஷாக் தந்த ஆனந்த் சீனிவாசன்.. ஆனா அடுத்த வரி நோட் பண்ணுங்க
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் அமைதியாக இருக்கிறது. இதற்குப் புவிசார் அரசியல் தொடங்கி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தங்க முதலீடு தொடர்பாகவும் தங்கம் விலை தொடர்பாகவும் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்
கடந்த மாத தொடக்கத்தில் ராக்கெட்டில் ஏறியது போலத் தங்கம் விலை பறந்தது. ஒரு கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சமாக ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9290 (24 கேரட்- ரூ.10,135) வரை கூட சென்றது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை கடைசி சில நாட்களாக மெல்லக் குறைந்து வருகிறது. பெரியளவில் தங்கம் விலை குறையவில்லை என்றாலும் ஓரளவுக்குக் குறைந்துள்ளது என்றே சொல்லலாம். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கம் விலை
நேற்று ஏப்ரல் 30ம் தேதி அக்ஷய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில், பலரும் ஆர்வமாகத் தங்கத்தை வாங்கியிருந்தனர். மேலும், கடந்த ஓராண்டில் தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறித்த போஸ்ட் ஒன்றையும் சென்னை தங்க நகை அசோசியேஷன் பகிர்ந்திருந்தனர். அதில் கடந்தாண்டு அக்ஷய திருதியை நாளில் (மே 10, 2024) 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.73,200க்கு இருந்ததாகவும் இந்தாண்டு அக்ஷய திருதியை (ஏப்ரல் 30) நாளில் அது ரூ.99,000ஐ எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
ஆனந்த் சீனிவாசன்
ஓராண்டில் தங்கம் விலை இந்தளவுக்கு உயர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. அதேநேரம் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறையாமல் இருக்கும் நிலையில், இது மேலும் குறையுமா என்ற கேள்வியைப் பலருக்கும் எழுப்பியுள்ளது. இதற்கிடையே தங்க முதலீடு தொடர்பாகவும் தங்கம் விலை தொடர்பாகவும் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தங்கத்தில் மட்டும் கூடாது
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "அக்ஷய திருதியை நம்புவோர் நேற்றைய தினம் நிச்சயம் தங்கம் வாங்கியிருப்பீர்கள். ஆனால், தங்கத்தை மட்டும் வாங்காதீர்கள். அக்ஷய திருதியை நாளில் எது வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும். பங்குச்சந்தையிலும் கூட எதாவது ஒரு பங்கை வாங்கலாம். தினசரி எதாவது ஒரு பங்கை வாங்கலாம். பங்குச்சந்தையில் வெற்றியடைய கன்சிஸ்டென்சி ரொம்ப முக்கியம். கொஞ்சம் கேப் விட்டாலும் நாம் மறந்துவிடுவோம். இதைத் தொடர்ந்து செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கம் விலை உயரும் என்பது போலவே இருக்கிறது. ஏனென்றால், தங்கம் விலை குறைவதற்கான காரணம் எதுவும் இல்லை. இதனால் எத்தனை நாட்கள் இப்படி அந்தரத்தில் தொங்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால், நாம் எதிர்பார்த்த அளவுக்குத் தங்கம் விலை ஏற்கனவே அதிகரித்துவிட்டது. சற்று மட்டுமே குறைந்துள்ளது. இன்றும் மேக்கிங் சார்ஜ் எல்லாம் சேர்த்தால் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்திற்கு அதிகமாகவே இருக்கிறது.
அக்ஷய திருதியை
கடந்தாண்டு அக்ஷய திருதியை சமயத்தில் தங்கம் எங்கே இருந்தது.. இப்போது எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை ஒப்பிட்டு சென்னை தங்க நகை அசோசியேஷன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்தாலே எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பது புரியும். அதைவிட மேலேயே கூட ஒரு கட்டத்தில் உச்சத்திற்குச் சென்றது.
பல வகை முதலீடு முக்கியம்
நான் தங்கம் குறித்துப் பேச ஆரம்பித்தது முதல் தங்கம் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பல பங்குகள் இதை விட அதிக மடங்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது. எனவே, சரியான பங்கைச் சரியான நேரத்தில் சரியான விலையில் வாங்குவது முக்கியம். அப்போது தான் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் நமக்குப் பொறுமை முக்கியம். ஒரு பங்கை வாங்கினால் அதில் பிஸ்னஸ் பார்ட்னராக சேர்கிறோம் என்று அர்த்தம். அதை விட்டுவிட்டு இன்று அந்தப் பங்கு ஏறி இருக்கிறதா.. குறைந்து இருக்கிறதா எனப் பார்ப்பதில் அர்த்தம் இல்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications