Gold: MCX-ல் அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி விலை.. இனி யாராலும் தடுக்க முடியாது? மக்களே உஷார்!
சென்னை: மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், உள்நாட்டு காமடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை புதன்கிழமை 6 சதவீதம் உயர்ந்துள்ளது நீண்ட காலத்திற்கு பின்பு அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டுள்ளது.
இந்த வரி உயர்வு அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், நகை வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. MCX சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து, வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MCX சந்தையில் தங்கம் விலை உச்சம்
MCX-யில் ஜூன் மாத ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்களுக்கு தங்கம் விலை 1 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,54,851 ஆக தொடங்கியது. முந்தைய நாள் முடிவு ரூ.1,53,442 ஆக இருந்தது.
வரி உயர்வு அறிவிப்பு மூலம் வர்த்தகம் தீவிரமடைந்ததால் விலை மேலும் உயர்ந்து 6 சதவீத உயர் வரம்பை (upper circuit) தொட்டது. இறுதியில் தங்கம் விலை ரூ.9,206 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.1,62,648 ஆக உயர்ந்தது. தற்போது 6.05 சதவீதம் உயர்ந்து 1,62,718 ரூபாயாக உள்ளது.
MCX சந்தையில் வெள்ளி விலை உச்சம்
இதேபோல், ஜூலை மாத வெள்ளி ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 4 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.2,90,224 ஆக தொடங்கின. முந்தைய முடிவு ரூ.2,79,062 ஆக இருந்தது. வர்த்தகம் தொடர்ந்து 6 சதவீத உயர் வரம்பை எட்டியது. இறுதியில் வெள்ளி விலை ரூ.16,743 உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.2,95,805 ஆக நிலைபெற்றது.
வரி உயர்வு ஏன்? அரசின் நோக்கம்
மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் இறக்குமதி மீதான வரியை உயர்த்தியுள்ளது. இந்த முடிவுக்கு முக்கிய காரணம் மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி வெளியேற்ற பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் இறக்குமதி அதிகரித்தால் அந்நிய செலாவணி வெளியேற்றம் அதிகரிக்கும் என்பதால், இந்த வரி உயர்வு மூலம் இறக்குமதிகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரி உயர்வு தங்கம்-வெள்ளி டோர், நாணயங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பொருட்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
இந்த வரி உயர்வு உடனடியாக தங்கம் மற்றும் வெள்ளி விலையை உயர்த்தியுள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை சுமார் 1070 ரூபாய் உயர்ந்து 15,400 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நகை வாங்கும் சாதாரண குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கும்.
தங்கம் விலை உயர்ந்தால் திருமணங்கள், விழாக்கள் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் நகை வாங்கும் மக்களுக்கு செலவு அதிகரிக்கும். வெள்ளி விலையும் உயர்ந்துள்ளதால் வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்களை வாங்கும் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை போக்கு
இந்தியாவில் வரி உயர்ந்துள்ள நிலையில், ஈரான் போர் முடிவுக்கு வரும் பட்சத்திலும் தங்கம் விலை அதிரடியாக உயர்வும் சூழ்நிலைக்குள் செல்லும். இனி வரும் காலக்கட்டத்தில் தங்கம் முக்கிய முதலீடாகவும் மாறும், இதனால் தங்கம் விலை உயர்வை யாராலும் தடுக்க முடியாது.














Click it and Unblock the Notifications