ஜிஎஸ்டி குளறுபடி இன்னும் 9 மாதத்திற்கு தொடருமாம்... சொல்வது அர்விந்த் சுப்ரமணியன்
இந்தியா தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மற்ற நாடுகளுக்கு முன் மாதிரி நாடாக இருக்கும் என்று பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
டெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அடிப்படையில் சில தொழில்நுட்ப குளறுபடிகள் இருந்தாலும், அவை எல்லாம் சரி செய்யப்பட்டு இன்னும் ஒன்பது மாதங்களில் சரியாகிவிடும் என்று பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சின்ன சின்ன தொழில்நுட்ப குளறுபடிகள் இருந்தாலும் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, இன்னும் ஆறு மாதத்திற்கு பின்பு மற்ற நாடுகளுக்கு இந்தியா தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முன் மாதிரி நாடாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரியினால் நீங்க கடந்த அஞ்சு மாசமா கஷ்டப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, லோல்பட்டு வேதனப்பட்டு, நொந்துபோயி இருப்பீங்க. இன்னும் ஒன்பது மாசத்துக்கு அப்படித்தான் இருக்கும் சார் என்கிறார் அரவிந்த்.
ஒம்போது மாசத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடுமா சார்? என்று கேட்டால்... ஹி ஹி ஹி... அதுக்கப்புறமா, அதுவே பழகிடும் சார்!!! என்று சொல்லாமல் சொல்கிறார்.

ஜிஎஸ்டியினால் பாதிப்பு
கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டாலும், இன்னும் பெரும்பாலான வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றிய விதிமுறைகள் மற்றும் ஜிஎஸ்டி இணையதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பங்கள் பிடிபடவில்லை.

தொழில் துறையினர் துயரம்
இதனாலேயே பெரும்பாலான தொழில்துறையினரும் வர்த்தகர்களும் தங்களின் கணக்கு வழக்குகளை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசும் தொழில்துறையினர் மற்றும் வர்த்தகர்களின் நிலைமையை ஆராய்ந்து, அவர்கள் தங்களின் வர்த்தக விபரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஜிஎஸ்டி ஆணையம்
கூடவே, ஜிஎஸ்டி ஆணையமும் மத்திய நிதி அமைச்சரும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் மாற்றியமைக்க தயாராகிவருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கான சட்ட திட்டங்களை மாற்றியமைக்க தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ஜிஎஸ்டி ஆணையமும் சட்ட நிபுணர்களை கேட்டுள்ளது. சட்ட நிபுணர்களும் தங்களின் ஆலாசனைகளை வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஜிஎஸ்டி ஆணையத்திற்கு அளிக்க இருக்கின்றது.

தொழில் நுட்ப குளறுபடிகள்
இந்நிலையில், மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அடிப்படையில் சில தொழில்நுட்ப குளறுபடிகள் இருந்தாலும், அவை எல்லாம் சரி செய்யப்பட்டு இன்னும் ஒன்பது மாதங்களில் சரியாகிவிடும் என்றார்.

அதிகப்பட்ட சரியே 12%தான்
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது இதுவரையிலும் பார்க்காத ஒரு மாற்று நிதிச்சீர்திருத்தம் (Transformational Fiscal Reform)ஆகும். தற்போது உள்ள அதிக பட்ச வரி விதிப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட்டு அவை பெரும்பாலும் 12 மற்றும் 18 சதவிகிதமாகவோ அல்லது மொத்தமாக 12 சதவிகிமாகவோ குறைக்கப்பட்டு விடும்.

பொருளாதார வளர்ச்சி
அதே சமயத்தில் ஒற்றை வரி விதிப்பிற்கு சாத்தியமில்லை. அப்படி இருந்தால் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சி இலக்கை எட்டுவது என்பது மிகமிகக் கடினமான ஒன்றாக ஆகிவிடும். எனவே நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு உதவும்.

9 மாதம சங்கடம்
இந்த மாற்றங்களுக்கு சற்று காலதாமதம் ஏற்படும் என்பதால், அதுவரையிலும் இந்த மாதிரியான குளறுபடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அதுவரையிலும் நாம் இந்த மாதிரியான சங்கடங்களை பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

குளறுபடிகள் சீராகும்
கூடவே, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அதிகபட்ச வரிவிதிகள் குறைக்கப்பட்டு, தற்போது உள்ள தொழில்நுட்பக் குளறுபடிகள் எல்லாம் சரி செய்யப்பட்டால், மற்ற நாடுகளுக்கு எல்லாம் இந்தியாதான் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் முன்மாதிரி நாடாக திகழும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications