சில்வர் ETF, சில்வர் BeES-ல் முதலீடு செய்துள்ளீர்களா..? முதல்ல இதை படிங்க.. மோடி அரசு வைத்த புதிய செக்!
மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள முடிவு நாடு முழுவதும் வெள்ளி முதலீட்டாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு வெள்ளி பார்கள் இறக்குமதியை 'தடையற்ற' பிரிவில் இருந்து 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவுக்கு மாற்றியுள்ளது. இந்த மாற்றம் மூலம் இனி வெள்ளி பார்கள் இறக்குமதி செய்ய அரசின் உரிமம் தேவைப்படும்.
மத்திய அரசு இந்த நடவடிக்கையை, நாட்டிந் அன்னிய செலவாணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும் இதன் மூலம் ஏற்படும் தாக்கம் முதலீட்டு சந்தையில் மிகப்பெரியதாக உள்ளது. இதில் முக்கியமாக வெள்ளி ETFகளும் மற்றும் சில்வர் பீஸ்-களும் தற்போது தள்ளுபடி விலையில் வர்த்தகமாகும் நிலையில் இருந்து பிரீமியம் நிலைக்கு மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி விதிமுறைகள் மாற்றம்
சனிக்கிழமை மத்திய அரசு வெளியிட்டுள்ல அறிவிப்பின் படி, வெள்ளி பார்கள் (99.9% தூய்மை) மற்றும் பல்வேறு வெள்ளி பொருட்களை 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவுக்கு மாற்றியது. முன்பு இவை 'தடையற்ற' இறக்குமதி பிரிவில் இருந்தன. இந்த மாற்றம் மூலம் தற்போது இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் அரசு உரிமம் தேவை.
சில நாட்களுக்கு முன்பு தான் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு. இந்த நிலையில் வெள்ளி மீது புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
அன்னிய செலாவணி
இந்தியா உலகின் மிகப்பெரிய வெள்ளி நுகர்வு நாடு, இந்தியா தனது மொத்த தங்கம் மற்றும் வெள்ளி தேவையில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து வருகிறது. மீதமுள்ள 20 சதவீதத்தை பழைய மறுசுழற்சி உலோகம் மூலம் தீர்த்து வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இறக்குமதியை முழுமையாக நிறுத்தாது என்றாலும், வெள்ளி எப்படி நாட்டுக்குள் வரும் என்பதை மாற்றும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான அன்னிய செலாவணியை கட்டுப்படுத்தும்.
வெள்ளி ETFகளுக்கு பெரும் தாக்கம்
இதன் மூலம் வெள்ளி ஈடிஎப் மற்றும் வெள்ளி பீஸ் விலையில் முக்கியமான மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது.
தற்போது வெள்ளி ETFகள் ஸ்பாட் விலை அதாவது நேரடி சந்தை விலை அல்லது NAV (நிகர சொத்து மதிப்பு) க்கு கீழே தள்ளுபடி விலையில் வர்த்தகம் ஆகின்றன. உதாரணமாக, SilverBees ETF ஒரு யூனிட்டுக்கு ரூ.249.85 என்ற விலையில் வர்த்தகம் ஆனது. அதன் NAV ரூ.253.12 ஆக இருந்தது. அதாவது 1.3 சதவீத தள்ளுபடி.
ஆனால் அரசின் இந்தப் புதிய இறக்குமதி கட்டுப்பாட்டின் காரணமாக இந்தியாவில் வெள்ளி மீதான பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதால், முதலீட்டாளர்கள் ETFகளை அதிகம் வாங்கத் தொடங்குவார்கள். இதனால் ETFகள் தள்ளுபடியில் இருந்து பிரீமியத்துக்கு (ஸ்பாட் விலைக்கு மேல்) மாறும் வாய்ப்பு உள்ளது.
பிரீமியம் என்றால் ETF விலை ஸ்பாட் விலையைவிட அதிகமாக இருக்கும். ஸ்பாட் விலை உயர்ந்தால் ETF விலை இன்னும் அதிகமாக உயரும். ஸ்பாட் விலை குறைந்தாலும் ETF விலை குறைவு குறைவாகவே இருக்கும்.
ஏன் இந்த மாற்றம்?
பிரீமியம் மற்றும் தள்ளுபடி என்பது முதலீட்டாளர்களின் தேவையை பிரதிபலிக்கும் ஒரு விஷயம். தேவை குறைவாக இருந்தால் ETFகள் NAVக்கு கீழே வர்த்தகம் ஆகும். தேவை அதிகரித்தால் பிரீமியம் விலைக்கு வர்த்தகம் செய்யப்படும். கடந்த இரு வாரங்களாக வெள்ளி ETFகள் ஒரு கிலோவுக்கு சராசரியாக ரூ.7,000 தள்ளுபடியில் வர்த்தகம் ஆனதாக கோடக் மஹிந்திரா AMC ஃபண்ட் மேனேஜர் சதீஷ் டோண்டபதி தெரிவித்தார்.
அரசின் உத்தரவுக்குப் பிறகு முதலீட்டு தர வெள்ளி போதுமான அளவு கிடைக்காது என்ற அச்சம் ஏற்பட்டால், இந்தத் தள்ளுபடி விரைவில் பிரீமியமாக மாறும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் வெள்ளி ஈடிஎப், வெள்ளி BeES இன் சந்தை விலையை விடவும் அதிகமாக வர்த்தகமாக வாய்ப்புள்ளது.
இறக்குமதி இனி எப்படி நடைபெறும்?
இனி இந்தியாவில் வெள்ளி இறக்குமதி முக்கியமாக நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாகவே நடைபெறும். RBI அங்கீகாரம் பெற்ற வங்கிகள், DGFT அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் புல்லியன் பரிவர்த்தனை மூலம் செயல்படும் நகைக்கடை நிறுவனங்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
வங்கிகள் சார்பில் கொண்டு வரப்படும் வெள்ளி பார்களுக்கு உரிமம் தேவையா என்பது குறித்த தெளிவு இன்னும் வரவில்லை. இந்த மாற்றம் உள்நாட்டு வெள்ளி விலையை உயர்த்தும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
மத்திய அரசின் நடவடிக்கை வெள்ளி முதலீட்டாளர்கள் மற்றும் ETF முதலீட்டாளர்களுக்கு புதிய தடுமாற்றத்தை சந்தையில் உருவாக்கியுள்ளது. அடுத்த இரு வாரங்களில் ETFகளின் வர்த்தக நிலை எப்படி மாறுகிறது என்பது தான் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும், காரணம் மத்திய அரசு தனது கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது விரைவில் நடக்க கூடிய விஷயம் இல்லை என்பதால் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை காரணமாக வெள்ளி விலை உயரும் வாய்ப்பை கொண்டு உள்ளது அல்லது சந்தை விலையை காட்டிலும் ப்ரீமியம் விலைக்கு விற்பனை நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications