மே 29.. நாள் குறித்த LIC.. மக்களே ரெடியாக இருங்க.. உங்க கணக்கிற்கு வரும் சர்ப்ரைஸ்!
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக தனது பங்குதாரர்களுக்கு 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில் இன்று ரெக்கார்ட் தேதியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள சுமார் 22 லட்சம் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்த பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், தனது பங்குதாரர்களுக்கு இலவசமாக கூடுதல் பங்குகளை வழங்குவதன் மூலம் அவர்களின் முதலீட்டு மதிப்பை அதிகரிக்க உள்ளது.

போனஸ் திட்டத்தின் முக்கிய விவரங்கள்
எல்ஐசி இயக்குநர் குழு ஏப்ரல் மாதத்தில் இந்த போனஸ் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதாவது ஒவ்வொரு பங்குதாரரும் தாங்கள் வைத்திருக்கும் ஒரு பங்குக்கு ஒரு புதிய பங்கை இலவசமாகப் பெறுவார்கள். இந்த போனஸ் பங்குகள் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகளாக, எல்ஐசி நிறுவனத்தால் முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளாக வழங்கப்படும்.
எல்ஐசி நிறுவனம் இந்த போனஸ் பங்குகளை வழங்குவதற்காக தனது இருப்பு மற்றும் உபரி நிதியில் இருந்து சுமார் ரூ.6,325 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 2025 டிசம்பர் 31-ம் தேதி முடிவில் எல்ஐசியின் மொத்த நிதி இருப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தன.
இந்த நிதி ஆதாரத்தின் அடிப்படையில் தான் போனஸ் பங்குகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட பிறகு இந்த செயல்முறை முழுமையாக நிறைவேற்றப்படும்.
பதிவு தேதி மற்றும் பங்குகள் கிரெடிட்
இந்த நிலையில் எல்ஐசி மே 29ஆம் தேதியை பதிவு தேதியாக (Record Date) நிர்ணயித்துள்ளது. இந்த நாள் வர்த்தக முடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே போனஸ் பங்குகளை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
போனஸ் பங்குகள் ஜூன் 12, 2026-க்குள் பங்குதாரர்களின் டீமேட் கணக்குகளில் தானாகவே கிரெடிட் செய்யப்படும். பங்குதாரர்கள் இதற்கு தனியாக எந்த விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை. இது முழுமையாக தானியங்கு முறையில் நடைபெறும்.
போனஸ் பங்கு என்றால் என்ன? எப்படி பயன்படும்?
போனஸ் பங்கு என்பது நிறுவனம் தனது சொந்த இருப்பு நிதியைப் பயன்படுத்தி, தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு இலவசமாக கூடுதல் பங்குகளை வழங்குவதாகும். எல்ஐசி விஷயத்தில் 1:1 விகிதம் என்பது ஒரு பங்குக்கு ஒரு பங்கை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
உதாரணமாக, ஒருவர் 100 பங்குகளை வைத்திருந்தால், போனஸ் மூலம் மேலும் 100 பங்குகள் இலவசமாகக் கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் 200 பங்குகள் கிடைக்கும். பங்குகள் அதிகமாக கொடுக்கப்படுவதால் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு மாறாது. ஆனால் ஒவ்வொரு பங்கின் விலை சராசரியாக பாதியாகக் குறையும். இதனால் பங்கின் விலை குறைந்து சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்குவது எளிதாகும் மற்றும் வர்த்தக அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பலன்கள்
இந்த போனஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால செல்வ வளர்ச்சிக்கு உதவும். இதனால் உடனடி பண வருமானம் தராவிட்டாலும், பங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்காலத்தில் லாப வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும், எல்ஐசி போன்ற பெரிய நிறுவனம் போனஸ் பங்குகள் வழங்குவது என்பது அதன் நிதி ஆரோக்கியம் மற்றும் வலுவான லாப வரலாற்றை காட்டும் அடையாளமாகும்.












Click it and Unblock the Notifications