14 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த முதலீடுகள்.. நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரிக்கும்
மும்பை: டிசம்பருடன் நிறைவடைந்த நிதி காலாண்டில், 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடு வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பு பிரச்சினை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்கள் புதிதாக 1 ட்ரில்லியன் மதிப்புக்கு முதலீடுகளை அறிவித்துள்ளளன.
செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில், அறிவிக்கப்பட்ட முதலீடுகளை விட இது, 53% குறைவாகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டால், இது 55% குறைவாகும்.

தனியார் முதலீடுகள்
டிசம்பருடனான காலாண்டில், தனியார் முதலீட்டு திட்டங்கள் 62% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. புதிதாக அறிவிக்கப்படும் அரசு திட்டங்களும், செப்டம்பர் நிதி காலாண்டை ஒப்பிட்டால், டிசம்பருடன் முடிவடைந்த, காலாண்டில், 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. 2004ம் ஆண்டில் இருந்தே ஒப்பிட்டு பார்த்தால், இதுதான் குறைந்த அளவாகும்.

பொருளாதார கொள்கை
கட்டுமானத்துறையை தவிர பிற முக்கிய துறைகள் அனைத்திலுமே, முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால், கட்டுமான துறைக்கு, குறைந்த அடிப்படை புள்ளிகள் வழங்கப்பட்டிருந்ததையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. அப்படியிருந்தும், சிறு அளவுக்கு வளர்ச்சியைதான், அத்துறை பெற்றுள்ளது. வராக்கடன் அதிகரிப்பு, தேர்தல் வரும் நிலையில், பொருளாதார கொள்கைகள் மாற்றப்படுமோ என்ற நிலையற்றத்தன்மை, நிலுவையிலுள்ள திட்டங்களுக்கு அனுமதி தராதது போன்றவை முதலீடு சரிவடைய காரணம்.

துறைரீதியாக பாருங்கள்
தனியார் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்த காலாண்டில், 24% அளவுக்கு உள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். மின்சாரத்துறை மற்றும் உற்பத்தி துறையில்தான், நிலுவை திட்டங்கள் அதிகமாக உள்ளன. மின் துறை 35.4%, உற்பத்தி துறை 29.2% நிலுவை திட்டங்களுக்கு சாட்சியாகியுள்ளது அதிர்ச்சி தகவலாகும். போதிய நிதி கிடைக்காமை, எரிபொருள் மற்றும் கச்சா பொருட்களில் நிலவும் சிக்கல்கள், மோசமான சந்தை நிலவரம் போன்றவை திட்டங்கள் நிலுவையில் இருக்க காரணம்.

தேர்தல் வரை இப்படித்தான்
வங்கிகள், கழகங்கள் உள்ளிட்டவற்றுக்கு நெருக்கடி அதிகரித்திருப்பதால், முதலீடுகளுக்கு நிதி கிடைப்பதில்லை என்பது திட்டங்கள் இழுபறியாக இருக்க முக்கிய காரணம். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த ஐயப்பாடும், முதலீடுகளை குறைக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. காத்திருந்து செயல்படலாம் என்ற முடிவில்தான் முதலீட்டாளர்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கும் குறையும். விவசாய கடன் தள்ளுபடி போன்ற கவர்ச்சி அரசியல் மீண்டும் கையிலெடுக்கப்படும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களிடம் உள்ளதாம். எனவே, தேர்தல் முடிவடையும் வரை முதலீடு குறையத்தான் செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications