மானிய விலை கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த பரிசீலனை: வீரப்ப மொய்லி
டெல்லி: வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12 ஆக உயர்த்த எந்த திட்டமும் இல்லை. இது குறித்து இறுதி முடிவை அரசியல் விவகாரத்திற்கான மத்திய அமைச்சக குழு தான் எடுக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அவர் தற்போது கூறுகையில்,
வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமரிடம் பேசவிருப்பதாக நாளிதழ்களில் பார்த்தேன். இது குறித்து காங்கிரஸ் துணை தலைவரோ அல்லது பிரதமரோ என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் 15 கோடி பேரில் 89.2 சதவீதம் பேர் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே கூடுதல் சிலிண்டர்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். அவ்வாறு சிலிண்டரின் எண்ணிக்கையை உயர்த்துவதால் அரசுக்கு கூடுதலாக ரூ.3,300 கோடி முதல் ரூ. 5,800 கோடி வரை செலவாகும் என்றார்.












Click it and Unblock the Notifications