TCS நிறுவனத்தில் இப்படியொரு விஷயம் நடக்கும்னு எதிர்பார்க்கல.. 1 வருட கேப்பில் மீண்டும் சம்பவம்!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 2025-26 நிதியாண்டில் தனது ஊழியர் எண்ணிக்கையில் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் மிகப்பெரிய வர்த்தக மாற்றத்தை எதிர்கொண்டு வந்த ஐடி துறையில், அனைத்து நிறுவனங்களும் மிகப்பெரிய மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் டிசிஎஸ்-ம் முக்கியமாக 2026ஆம் நிதியாண்டில் மிகவும் கடுமையான முடிவை எடுத்தது. அதுதான் பணிநீக்கம்.
2026ஆம் ஆண்டில் மொத்தமாக 23,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நிதியாண்டு முடிவில் அதாவது மார்ச் 31ஆம் தேதி முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 5,84,519 ஆக உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் டிசிஎஸ், பென்ச் ஊழியர்களை குறைந்துள்ளது, இதேபோல் இனி வரும் காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பத்தில் பணியாற்றும் ஊழியர்களை பிற தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு பணியாற்ற வாய்ப்பு அளித்தது அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறவும் வாய்ப்பு அளித்தது.
ஏஐ யுகத்தில் பல போராட்டங்களை எதிர்கொள்ள சரியான, நிலையான அணியை உருவாக்கும் முயற்சியில் டிசிஎஸ் இறங்கியது. இதேவேளையில் IT துறையில் தேவை சற்று மந்தமாக இருந்த நிலையில், பணியாளர் அமைப்பை கூடுதலாக மறுசீரமைக்க வேண்டி நிலையை உருவாக்கியது. இதன் எதிரொலியாக 23,000 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மார்ச் காலாண்டு
2026ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் பார்க்கும் போது TCS ஊழியர் எண்ணிக்கை 2,356 பேர் அதிகரித்துள்ளனர். ஆனால் முழு ஆண்டை கணக்கிடும் போது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 23,000 ஊழியர்கள் குறைவாக உள்ளனர்.
வரலாற்று சொல்வது என்ன
இந்திய ஐடி துறையை பொறுத்த வரையில் டிசிஎஸ் என்பது ஒரு அரசு பணி போல், பணிநீக்கம் என்பது மிகவும் அரிதாகவே நடக்கும் என்ற கருத்து ஐடி ஊழியர்கள் மத்தியில் காலம் காலமாக இருந்து வருகிறது. முக்கியமாக காலக்கட்டத்தில் கூட டிசிஎஸ் பணிநீக்கம் செய்யாமல் இருந்தது, ஆனால் 2024ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 19 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழியர் எண்ணிக்கையை குறைத்திருந்தது.
இதை தொடர்ந்து 2025ஆம் நிதியாண்டில் ஊழியர் எண்ணிக்கை அதிகமான நிலையில் வெறும் 1 வருட கேப்பில் 2026ஆம் நிதியாண்டில் மீண்டும் ஆட்குறைப்பு நடந்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் ஆச்சரியப்படும் அளவில் TCS ஒரே ஆண்டில் 1.03 லட்சம் ஊழியர்களைச் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திறன் அடிப்படையில் பணிநீக்கம்
TCS 2026ஆம் நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை திறன் பொருத்தமின்மை (skill mismatch) காரணமாக பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மார்ச் காலாண்டில் டிசிஎஸ்-ன் அட்ரிஷன் விகிதம் (ஊழியர்கள் வெளியேறும் விகிதம்) முந்தைய காலாண்டின் 13.5 சதவீதத்திலிருந்து சற்று உயர்ந்து 13.7 சதவீதமாக இருந்தது.
மார்ச் காலாண்டு முடிவுகள்
ஐடி ஊழியர் எண்ணிக்கை குறைப்புக்கு மத்தியிலும் TCS-ன் நிதி செயல்திறன் வலுவாகவே உள்ளது. மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.13,718 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 29 சதவீதம் அதிகமாகும். வருவாய் ரூ.70,698 கோடியாக 5.4 சதவீதம் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications