ஜிஎஸ்டி வரியை குறைத்து விட்டோம்... பொருட்களின் விலையை குறைங்க - ராம்விலாஸ் பஸ்வான்
குறைக்கப்பட்ட விலையில் நுகர்பொருட்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியானது 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டதை அடுத்து புதிய குறைக்கப்பட்ட விலையில் நுகர்பொருட்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று நடந்த 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை அதிக பட்ச வரியான 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதிகள் மற்றும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உணவு விடுதிகளுக்கான ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிமாகவும் குறைக்கப்பட்டது. இந்த குறைக்கப்பட்ட வரிவிதிப்பு முறையானது இன்று நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்மூலம் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான விலையானது கணிசமாக குறையும் என்றும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பினால் தங்களுக்கு எந்தவிதமான பயனும் கிடையாது என்று சில்லறை விற்பனையாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கினர். அரசு அறிவித்தபடி நுகர்பொருட்களின் விலை குறையுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

ராம்விலாஸ் பஸ்வான்
நுகர்பொருட்களின் விலை குறைப்பு நடவடிக்கையை உறுதி செய்ய மத்திய நுகர்பொருட்கள் மற்றும் வழங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சகமும் விலை குறைப்பு நடவடிக்கைக்கான உத்தரவை ஏற்கனவே பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ராம் விலாஸ் பஸ்வான், "பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியானது அதிகபட்ச வரியான 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் சாதாரண மற்றும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உணவு விடுதிகளுக்கான ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்களுக்குப் பயன்
இந்த விலை குறைப்பு மூலம் கிடைக்கும் பயன்பாட்டை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்ய மாநில அளவியல் துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

குறைக்கப்பட்ட விலை
கூடவே தொகுக்கப்பட்ட நுகர்பொருட்களை (Packaged commodities) விற்பனை செய்யும் நிறுவனங்கள் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட விலை குறியீட்டை ஒட்டி விற்பனை செய்யவேண்டும்.

நுகர்பொருட்கள் விற்பனை
அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் நுகர்பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்ய அன்றாடம் கண்காணிக்கப்படும் என்றும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
இதுபற்றிய சுற்றறிக்கை விரைவில் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு தெரிவிப்பது அவசியம்
அளவியல் சட்டவிதிகளின்படி, நுகர்பொருட்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை உயர்வினை பொதுமக்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கவேண்டும். ஆனால், அதேசமயத்தில் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கோண்டால் அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று எந்தவிதமான சட்டவிதிகளோ நிபந்தனையோ கிடையாது.

விலை குறையுமா?
மத்திய அரசானது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதே விலை குறைப்பு நடவடிக்கையால் கிடைக்கும் பயன்பாட்டை நுகர்வோர் பெறவேண்டும் என்பதே. ஆனால் மத்திய அரசின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications