தங்கம் விலையை விடுங்க.. ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்துவது எப்படி? அட இவ்வளவு ஈஸியா
சென்னை: இந்த காலத்தில் செலவுகளை நிர்வகிக்க தெரியாமல் கடன் சுழலில் சிக்கி பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகளும் கூட பெரிய கடனில் நம்மை சிக்கவைத்துவிடும். அப்படி நாம் செய்யும் சில மேஜர் தவறுகள் குறித்தும் அதில் இருந்து நாம் எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்தும் நாம் பார்க்காலம்.
இப்போது இளைஞர்கள் பலருக்கும் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கிறது. ஆனால், மறுபுறம் செலவுகளையும் அவர்கள் அதிகரிக்கிறார்கள். இதனால் எவ்வளவு சம்பாதித்தாலும் கூட கடனிலேயே வாழ்க்கை ஓட்ட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ நாம் பின்பற்ற வேண்டிய பட்ஜெட் டிப்ஸ் குறித்து நாம் பார்க்கலாம்.

முதல் தவறு
முதல் தவறு முறையான பட்ஜெட் அல்லது திட்டமிடல் செய்யாமல் இருப்பது. வருமானம் மற்றும் செலவுகளைப் பற்றி அலட்சியமாக இருந்தால் பணத்தின் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இருக்காது. இதுபோல பட்ஜெட் மற்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் போனால் ரொம்பவே ஈஸியாக கடன் சேர்ந்துவிடும். ஒரு முறை நாம் கடனில் சிக்கிவிட்டாலே அதில் இருந்து வெளியே வருவது ரொம்ப கடினம்.
பட்ஜெட் போடும்போது தான் நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பது தெளிவாக தெரியும். எப்போதும் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை தரக்கூடாது.. தேவைகளுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும்.. உலகின் முன்னணி முதலீட்டாளர்களான வாரன் பஃபெட், சார்லி முங்கர் உள்ளிட்டோர் கூட கூறுவது இதைத்தான்.!
முக்கியமான தவறு
அடுத்து நாம் அனைவரும் செய்யும் மிக முக்கியமான தவறு சிறிய சிறிய செலவுகளை கவனிக்காமல் விடுவதுதான். இன்றைய வாழ்கையில் நாம் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறோம்.. இதனால் காபி, டீ என சின்ன சின்ன செலவுகளை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். ஆனால், இந்த சிறிய செலவுகள் எல்லாம் சேர்ந்து அதுவே பட்ஜெட்டில் ஒரு பெரிய தொகையாக மாறிவிடுகிறது. பட்ஜெட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் சிறிய செலவுகளையும் தவறவிடாமல் நோட் செய்து வைக்கவும். இதற்காக ஒரு டைரியை போட்டு சின்ன சின்ன செலவுகளையும் எழுதி வைக்கவும். டைரி போட்டு எழுதி வைக்க முடியவில்லை என்றால் இதற்காகவே செயலிகளும் கூட உள்ளன. சும்மா நம்ம நண்பருக்கு மெசேஜ் அனுப்புவது போல அனுப்பி, செலவுகளை நோட் செய்து வைத்துக் கொள்ளலாம். கடனை தவிர்க்க இதை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
எமர்ஜென்சி தொகை முக்கியம்
வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது.. உடல்நலம், பிஸ்னஸ் லாஸ் என எப்போது வேண்டும் என்றாலும் எந்த செலவுகள் வேண்டுமானாலும் ஏற்படலாம். குறைந்தது 6 மாத சம்பளம் எமர்ஜென்சி தொகையாக இருக்க வேண்டும். எமர்ஜென்சி தொகை என்பது எந்தவொரு முதலீடாக இருப்பதையும் விட வங்கியில் பணமாக இருப்பது சிறந்தது. அப்போது தான் உடனே அதை பயன்படுத்த முடியும். இந்த எமர்ஜென்சி தொகை போகவே சேமிப்பு எல்லாம் இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு வேண்டாம்
உங்களிடம் எமர்ஜென்சி தொகை இல்லை எண்றால் அவசர செலவுகளைச் சமாளிக்க கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோம். அதை உரிய நேரத்தில் முழுமையாக திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் அதுவே பெரிய கடனாக மாறிவிடும். இருக்கும் எல்லா கடன்களிலும் கிரெடிட் கார்டு கடன் தான் ஆபத்தானது. கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டியை கேட்டால் உங்களுக்கு தலையே சுற்றும். எனவே, எமர்ஜென்சி தொகையை உரிய முறையில் பராமரிக்கவும்.












Click it and Unblock the Notifications