"வரப்பிரசாதம்.." தங்கம் விலை கேப் விடாம சரியுதே.. இது எவ்வளவு நாள் தொடரும்! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: டிரம்ப் எப்போது வரியை அறிவித்தாரோ அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வருகிறது. இதனால் மக்கள் செம மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை திடீரென சரிய என்ன காரணம்.. இது எவ்வளவு காலம் தொடரும்! எந்தளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பால் சில வாரங்களாகவே சர்வதேச பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரெசிப்ரோக்கல் வரி காரணமாகத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8560 வரை விற்பனையானது. ஆனால், டிரம்ப் வரியை அறிவித்த பிறகு நிலைமை மொத்தமாக மாறியது.

கேப் விடாமல் சரியும் தங்கம் விலை
தங்கம் விலை கேப் விடாமல் தொடர்ந்து சரிந்து வந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.335 வரை சரிந்துள்ளது. நேற்றைய தினம் (ஏப்ரல் 8) 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8225க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை ஏன் குறைகிறது.. இது எத்தனை காலம் குறைகிறது என்பது குறித்த காரணங்களை ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் மேலும் கூறுகையில், "தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8200 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இது நமக்கு வரப்பிரசாதம். ஏன் என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
வரப்பிரசாதம் ஏன்?
தங்கம் என்பது பாசிட்டிவாக இருக்கிறது. மற்ற இடங்களில் நஷ்டத்தைச் சந்தித்தவர்களும் கூட தங்கத்தில் லாபம் அடைந்திருந்தனர். பணத்தைத் தூக்கிப் போட்டுத் தான்.. மற்ற இடங்களில் அடைந்த நஷ்டத்தைச் சமாளிக்க வேண்டும். எனவே, எங்கு லாபம் இருக்கிறதோ அதை விற்று நஷ்டத்தைக் கவர் செய்வார்கள். இதனால் தான் தங்கத்தைப் பல முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். இதன் காரணமாக ப்யூச்சர்ஸ் மற்றும் ஸ்பாட் மார்க்கெட்டில் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 250 டாலர் வரை குறைந்துள்ளது.
அதேநேரம் தங்கத்தின் அடிப்படைகள் எதாவது மாறி இருக்கா எனப் பார்த்தால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. சொல்லப்போனால் இன்னும் சிறப்பாக மாறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அமெரிக்காவில் பணவீக்கம் வந்தால் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்.
எப்போது வரை குறையலாம்?
அமெரிக்காவில் ஏற்கனவே பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், அது ஒருமுறை மட்டும் ஏற்பட்ட பணவீக்கமா இல்லை.. நிரந்தர பணவீக்கமா என்பதை ஆய்வு செய்யப் போவதாக அந்நாட்டின் பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் கூறியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அது நிரந்தர பணவீக்கம் என்றே நினைக்கிறேன். இதனால் அமெரிக்காவில் விலைவாசி அதிகரித்துக் கொண்டே போகும். மேலும், வெளிநாட்டினரையும் டிரம்ப் அரசு துரத்தி வருவதால் தொழிலாளர்களுக்குச் செலவழிக்கும் தொகையும் அதிகரிக்கும்.
இது போன்ற காரணங்களால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும். இந்த காலாண்டிலேயே பணவீக்கம் வந்துவிடும். ஆனால், அதனால் நமக்குப் பெரியளவு பாதிப்பு தெரியாது. அடுத்த 3 மாதங்களுக்கு பிறகே இதன் உண்மையான பாதிப்பு தெரிய வரும். அதாவது ஜூன் அல்லது ஜூலை மாதம் தான் டிரம்ப் வரியால் என்ன பாதிப்பு என்பது தெரிய வரும். அதுவரை தங்கம் விலை குறைந்தால் சந்தோஷம் தான். அதேநேரம் மே ஜூனில் இது விஸ்வரூபம் எடுக்கலாம்.
அடுத்து என்ன நடக்கும்?
மார்ச் மாதத்தின் அமெரிக்க ஜிபிடி அப்போது தான் தெரிய வரும். அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. அதேநேரம் பணவீக்கம் ரொம்பவே அதிகரித்தால் நிலைமையைச் சமாளிக்க வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தும். அதுதான் தங்கத்திற்குப் பிரச்சினை. இருப்பினும், நீண்ட காலம் அதிக வட்டியுடன் அமெரிக்கப் பொருளாதாரம் தாங்காது. சீக்கிரமே வட்டியைக் குறைப்பார். அது தங்கத்திற்கு பாசிட்டிவ் தான்.
மேலும், வர்த்தக போரால் ஏற்கனவே சீனா தனது அந்நிய செலாவணியை விற்றுத் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகிறது. ரஷ்யாவும் இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டது. மெல்ல மற்ற நாடுகளும் தங்கத்தின் மீதான இருப்பை அதிகரிக்கும். இதுவும் முக்கியமானது. எனவே, தங்கம் விலை ஓவராக விழாது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications