பிரதமர் மோடியின் வேண்டுகோள் படி தங்கம் வாங்குவதை ஓராண்டு நிறுத்தினால் என்னாகும் தெரியுமா?
டெல்லி: மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் வகையில், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் பழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், திருமணங்களுக்குத் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். அப்படி பிரதம்ர் மோடியின் வேண்டுகோள் படி தங்கம் வாங்குவதை மக்கள் ஓராண்டு நிறுத்தினால் என்னாகும் என்பதை பார்ப்போம்.
ஈரான் போரின் விளைவுகளால், அமெரிக்கா முதல் அண்டை நாடான பாகிஸ்தான் வரை பல நாடுகளில் வரலாறு காணாத எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகிறது. ஆனால் இந்தியா மட்டும் இந்தத் தாக்கத்திலிருந்து பெரும்பாலும் தப்பித்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் இந்த நிலை மாறக்கூடும் என்பதை பிரதமர் மோடி தனது உரையில் மறைமுகமாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் நகரில் நேற்று உரையாற்றும் போது, "கொரோனா காலகட்டத்தில், நாம் 'வீட்டிலிருந்தே வேலை செய்தோம்', இணையவழிச் சந்திப்புகள் நடத்தினோம்.. வீடியோ காலில் தான் மாநாடுகள் நடத்தினோம். மேலும், நாங்கள் அவற்றுக்குப் பழகியும் போயிருந்தோம். எனவே இன்று, தேசிய நலன் கருதி, நாம் அந்த நடைமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே காலத்தின் தேவை. நாம் மீண்டும் அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.
அதேபோல் சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்காக, அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்காக தங்கம் வாங்குவதைக் குறைத்து, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்குமாறு மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரதம்ர் மோடியின் வேண்டுகோள் படி தங்கம் வாங்குவதை மக்கள் ஓராண்டு நிறுத்தினால் என்ன நன்மை மற்றும் தீமைகள் என்பதை பார்ப்போம். அந்நியச் செலாவணி கையிருப்பு உயரும். இந்தியா தனது தேவையில் 90% தங்கத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இதற்காக ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை நாம் செலவிட்டு வருகிறோம. மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால், டாலர் வெளியேறுவது குறையும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உலகச் சந்தையில் வலுவடையும்.
அந்தமுதலீடு வேறு பக்கம் திரும்பும். ஏனெனில் தங்கத்தில் முடங்கும் பணம் "Dead Investment" என்று பொருளாதார நிபுணர்களால் கருதப்படுகிறது. மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால், அந்தப் பணம் பங்கு சந்தையில் போடப்படும். இது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோல் வங்கிக் கணக்குகளில் போடப்படும். வங்கிகளிடம் அதிகப் பணம் சேரும், இது தொழில்துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க உதவும். புதிய தொழில்களில் முதலீடு செய்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நகையை ஓராண்டுக்கு வாங்காமல் போனால், இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்தும் ஏற்படும். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் நகைத்தொழிலை நம்பி இருக்கிறார்கள். ஓராண்டு விற்பனை இல்லை என்றால், சிறிய நகைக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் முடங்கும். நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இது உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சிதைக்கும்.
தேவை குறையும் போது, தானாகவே தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். இது தங்கம் வைத்திருப்பவர்களின் சொத்து மதிப்பைக் குறைக்கும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் இது சாதாரண மக்களுக்குத் தங்கம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் மதிப்பு குறைந்தால் நகையை அடகுவைத்தவர்கள் நகையை திருப்ப மாட்டார்கள். நகை கடைகளும் பல திவால் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் நகை விற்பனை துறை மொத்தமாக திவால் ஆகும் அபாயமும் உள்ளது.
எனினும் இந்தியக் குடும்பங்களில் தங்கம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது ஒரு "பாதுகாப்பு அரண்" ஆக இருந்து வருகிறது. நம்மூரில் அவசரத் தேவைக்குத் தங்கம் அடகு வைப்பது நம் ஊர் வழக்கம். எனவே, மக்கள் முழுமையாக இதை நிறுத்துவார்களா என்பது சந்தேகம் தான்.














Click it and Unblock the Notifications