DA Hike: அகவிலைப்படி எதற்காக? ஏன் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது?
சென்னை: விலைவாசி உயர்வு தாக்கத்தால் அரசு ஊழியர்களின் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க சில பாதுகாப்பு முறைகளை மத்திய அரசு காலம் கலமாக கடைப்பிடித்து வருகிறது. இதில் முக்கியமான கருவியாக இருப்பது அகவிலைப்படி (Dearness Allowance - DA). மத்திய அமைச்சரவை இன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், ஓய்வூதியதார்களின் ஓய்வூதியமும் அதிகரிக்க உள்ளது. இதேபோல் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஏன் இந்த அகவிலைப்படி கொடுக்கப்படுகிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

அகவிலைப்படி என்றால் என்ன?
அகவிலைப்படி என்பது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் ஒரு கூடுதல் தொகை. இது அவர்களின் அடிப்படை சம்பளத்தை வைத்து, விலைவாசி அடிப்படையில் கணக்கிட்டு சம்பளத்துடன் சேர்த்து அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி மூலம் மக்களின் தினசரி வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும் போது, அந்தச் செலவுகளை சமாளிக்க அரசு ஊழியர்களின் உண்மையான வருமான மதிப்பு குறையாமல் இருக்க உதவுவது தான் அகவிலைப்படியின் முக்கிய நோக்கம்.
எப்படி கணக்கிடப்படுகிறது?
அகவிலைப்படி உயர்வு பொதுவாக பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. குறிப்பாக தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீடு (CPI-IW) தரவுகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் விலைவாசி உயர்வு எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப DA சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
வருடத்திற்கு இருமுறை திருத்தம் - ஏன்?
மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை, பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், DA மற்றும் DR (Dearness Relief) மாற்றங்களை அறிவிக்கிறது. வருடத்திற்கு இரண்டு முறை விலைவாசி உயர்வின் தாக்கத்தை சரி செய்யும் பொருட்டு அரசு ஊழியர்களின் வருமானத்தை பொருளாதார நிலைக்கு ஏற்ப சீரமைக்கப்படுகிறது.
அகவிலைப்படி ஏன் முக்கியம்?
அகவிலைப்படி அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. விலைவாசி உயர்ந்தாலும், அத்தியாவசிய பொருட்கள், வீடு, மருத்துவம் போன்ற தேவைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும், அடிப்படை சம்பளம் நீண்ட காலத்திற்கு மாறாமல் இருக்கும் நிலையில், DA மூலம் வருமான உயர்வு கிடைக்கிறது, இந்த வருமான உயர்வு மூலம் விலைவாசி தாக்கத்தை தணிக்க முடியும்.
ஓய்வுபெற்றவர்களுக்கு இது Dearness Relief (DR) என்ற பெயரில் வழங்கப்பட்டு, அவர்களின் ஓய்வூதியத்தின் மதிப்பை குறையாமல் இந்த அகவிலைப்படி நிவாரணம் பாதுகாக்கிறது.
DA உயர்வு அறிவிப்பு
கடைசியாக அக்டோபரில் 55% இருந்த DA, 58% ஆக உயர்த்தப்பட்டது. இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2% உயர்வு ஒப்புதல் பெற்றுள்ளதால் 60 சதவீதமாக உயர உள்ளது, இது ஊழியர்களுக்கு சிறிய அளவிலான சம்பள உயர்வை வழங்கும். இதனால் பணவீக்கத்தின் தாக்கம் ஒரு அளவிற்கு குறைக்கப்படும்.
தனியார் ஊழியர்களுக்கு ஏன் அகவிலைப்படி இல்லை
அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் அகவிலைப்படி வழங்குவது மத்திய நிதியமைச்சகத்தின் அனைத்திந்திய சேவைகள் விதி 1972 கீழ் கட்டாயமாகும். ஆனால் தனியார் ஊழியர்களுக்கு இது கட்டாயமில்லை என இந்த விதியின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு மாறாக தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த சம்பள அமைப்பு (CTC) முறையை பயன்படுத்துகின்றனர். இதில் அடிப்படை சம்பளம், சலுகைகள், போனஸ் போன்றவை சேர்த்து வழங்கப்படும். மேலும், தனியார் துறையில் சம்பள உயர்வு பெரும்பாலும் பணியாளர் செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடு அடிப்படையில் இருக்கும், அரசுத் துறையில் போல பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தானாக உயர்வு கிடைப்பது இல்லை.
சுருக்கமாக சொன்னால், அரசு ஊழியர்களுக்கு DA என்பது பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு கருவி, ஆனால் தனியார் துறையில் அதற்குப் பதிலாக செயல்திறன் அடிப்படையிலான சம்பள உயர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.
8வது ஊதியக்குழு எதிர்பார்ப்பு
இன்று மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வந்துள்ள நிலையில், 8வது ஊதியக்குழு தொடர்பான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, NC-JCM அமைப்பு 3.83 என்ற உயர்ந்த fitment factor-ஐ கோரியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 இலிருந்து சுமார் ரூ.69,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications