முடிவிற்கு வரும் மோதல்.. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகும் சித்து?.. சோனியா காந்தி ஸ்மார்ட் முடிவு!
சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி தூக்கி உள்ளார். அவரின் ஆட்சிக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் இருப்பதால் எங்கே தேர்தலுக்கு முன் அங்கு ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கமிட்டி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி பூசல் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட கமிட்டியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நியமித்தார். இந்த கமிட்டி பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். கட்சியில் போதிய தலித் பிரநிதித்துவம் இல்லை, சில அமைச்சர்கள் சரியாக செயல்படுவது இல்லை.

மின்சாரம்
மின் தடை அதிகம் உள்ளது. மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றெல்லாம் நிறைய புகார்கள் வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் நவ்ஜோத் சிங் சித்து நேரடியாக பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் உயர் தலைவர்களை சந்தித்து அமரீந்தர் சிங்கிற்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் இது தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து தொடர் ஆலோசனைகளை நடத்தி வந்தார்.

ஆலோசனை
இந்த நிலையில்தான் அங்கு உட்கட்சி மோதலை சரி செய்யும் விதமாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கட்சி மோதலை சரி செய்யும் விதமான சோனியா காந்தி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு இவரின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

மாற்றம்
அதோடு குருப்ரீத் கங்கார் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மாறாக அமரீந்தர் சிங் அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நீடிப்பார், கட்சி தலைமை நவ்ஜோத் சிங் சித்துவிடம் இருக்கும். அதேபோல் அமைச்சரவையில் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளர்களுக்கும் பிரநிதித்துவம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications