"சுத்த பொய்.." பல்கலைக்கழக விளக்கத்தை ஏற்க மறுத்த மாணவிகள்.. மீண்டும் போராட்டம்.. என்னதான் நடக்கிறது
சண்டிகர்: மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக் ஆன விவகாரத்தில் சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மீண்டும் போராட்டம் வலுவடைந்து உள்ளது.
பஞ்சாப் தலைநகர் சண்டிகர் இயங்கி வரும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹாஸ்டலில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்றிரவு முதல் அங்குப் பல நூறு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

வீடியோ
குளியல் அறையில் கேமரா வைத்து மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளனர். முதலில் அங்குப் படிக்கும் ஆண் மாணவர்களால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரே சக மாணவி ஒருவர் இதைச் செய்தது தெரிய வந்தது. அதாவது பாத் ரூம் ஒன்றில் கேமரா வைத்த அந்த மாணவி, தினமும் மற்ற மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

என்ன நடந்தது
சிறிய ரக கேமரா மூலம் வீடியோ எடுத்து அதை அவர், அனைவரும் குளித்த பின்னர் கடைசியாகச் சென்று கேமாராவை மறைத்து எடுத்து சென்றுள்ளார். இந்த வீடியோக்களை அவர் சிம்லாவில் இருக்கும் ஒரு ஆணுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பெரியளவில் போராட்டம் நடந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்குப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

விளக்கம்
மேலும், இந்தச் சம்பவத்தில் அங்குப் படித்து வந்த 7 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவின. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக அந்த பல்கலைக்கழகம் மறுத்தது. எந்த மாணவியும் தற்கொலை முயற்சி எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், அதில் அந்த மாணவி தன் காதலனுடன் தனிப்பட்ட முறையில் அவரது வீடியோவை பகிர்ந்து உள்ளார் என்றனர்.

போலீசார்
குறிப்பாக வேறு எந்த மாணவியின் குளிக்கும் வீடியோவும் அதில் இல்லை என்றும் மாணவிகளின் குளியல் வீடியோ பற்றிப் பரவும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும் கூறப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கி உள்ள போலீசாரும், பல்கலைக்கழகம் கூறிய கருத்துகளை உறுதி செய்துள்ளனர். தனிப்பட்ட முறையில் அந்த மாணவி தனது வீடியோவை மட்டுமே காதலனுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தனர்.

மீண்டும் போராட்டம்
இருப்பினும், இதை மாணவிகள் நம்ப மறுக்கின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவே இப்படிப் பொய் சொல்வதாகத் தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மாலை தொடங்கிய இந்த போராட்டத்தில் பல நூறு மாணவிகள் கலந்து கொண்டு உள்ளனர். போராட்டம் நீட்டித்தால் பதற்றம் ஏற்படும் என்பதால் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications