சர்ச்சையை கிளப்பிய சண்டிகர் மேயர் தேர்தல்! திடீர் ட்விஸ்ட்! பாஜகவின் மனோஜ் சோன்கர் ராஜினாமா! பின்னணி
சண்டிகர்: பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் சண்டிகர் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்ட விதம் சர்ச்சையை கிளப்பியது. வாக்குச்சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து மனோஜ் சோன்கர் விலகியுள்ளார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. இந்த சண்டிகர் மாநகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதை "இந்தியா" கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது.. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் தேர்தலுக்கு முன்பு "இந்தியா" கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால் அவரே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடின.
இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மிகவும் காட்டமான கருத்துக்களை முன்வைத்தது.
ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயகத்தைப் படுகொலை செய்வது போன்றது.. அவர் கேமராவைப் பார்த்த பிறகும் வாக்குச் சீட்டில் ஏதோ செய்வது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது... இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்" என்றார். இந்த வழக்கின் விசாரணையை 19ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.
மேலும், தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில், சண்டிகர் மேயர் பதவியில் இருந்து மனோஜ் சோன்கர் விலகி உள்ளார்.












Click it and Unblock the Notifications