ஹரியானா: காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்கும் 'மல்யுத்த' ஜாம்பவான்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக மல்யுத்த ஜாம்பவான்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா களமிறங்கக் கூடும் என்கின்றன தகவல்கள். பாஜகவில் இணைந்தம் மல்யுத்த வீரர்களான பபிதா குமாரி போகத், யோகேஸ்வர் தத் ஆகியோருக்கு எதிராகவே காங்கிரஸ் வேட்பாளர்களாக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஹரியானாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி, இந்திய தேசிய லோக் தள், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை களம் காண்கின்றன. காங்கிரஸ்- ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடுவதால் ஆளும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிறும் நிலைமைதான் உள்ளது.
இந்த நிலையில் ஹரியானா தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக மல்யுத்த ஜாம்பவான்களை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களாக களமிறக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மல்யுத்த வீரர்களான பபிதா குமாரி போகத் மற்றும் யோகேஸ்வர் தத் ஆகியோர் ஏற்கனவே பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருமே இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடுமாம்.
அப்படி இருவரும் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் அநீதியாக தீர்ப்பால் பதக்கத்தை தவறவிட்டாலும் நாட்டு மக்களின் குறிப்பாக ஹரியானா மக்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கும் மண்ணின் மகள் வினேஷ் போகத் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதுவு வினேஷ் போகத்தின் உறவினரான பாஜக பபிதா குமாரி போகத் போட்டியிடும் தொகுதியிலேயே வினேஷ் போகத் களமிறக்கப்படலாம்; அதேபோல யோகேஸ்வர் தத்துக்கு எதிராக மற்றொரு மல்யுத்த வீரரும் பாஜகவை கடுமையாக எதிர்த்துப் போராடுகிறவருமான பஜ்ரங் புனியா களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஹரியானா அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications