சென்னையுடன் தொடர்பு.. வினேஷ் போகத்துக்கு எதிராக பாஜக வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த யோகேஷ்?
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவர் யார்? அவருக்கும் சென்னைக்கும் எத்தகைய பந்தம் உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவாப் சிங் சைனி உள்ளார். 5 ஆண்டு சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 8 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஹரியானாவை பொறுத்தவரை மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தின் பெயர் இடம்பெற்றது. கடந்த மாதம் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் காங்கிரஸில் சேர்ந்த நிலையில் அவருக்கு ஜுலானா தொகுதியி்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான் ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இதில் மொத்தம் 21 பேரின் பெயர்கள் இடம்பெற்றன. இதில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத்தை எதிர்த்து கேப்டன் யோகேஷ் பைரகி களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் யார் என்றால் ஹரியானா மாநில பாஜகவின் இளைஞர் பிரிவின் துணை தலைவராகவும், ஹரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு வயது 32. மேலும் இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும் இவர் பேரிடர் காலத்தில் பைலட்டாக பணியாற்றி அதிக கவனம் பெற்றார்.
மழை வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது யோகேஷ் பைரகி மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிகளுக்கு உதவினார். அதேபோல் கொரோனா தொற்று பரவியபோது வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை விமானத்தில் மீட்கும் ‛வந்தே பாரத்' திட்டத்தில் இவர் பங்கேற்று இருந்தார். கொரோனா காலத்தில் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த மத்திய அரசின் செயல் யோகேஷ் பைரகி ஈர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் பாஜகவில் சேர்ந்தார். இவர் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தின் சாபிதான் பகுதியை சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications