வன்முறையால் நீடிக்கும் பதற்றம்.. உ.பி பாணியில் புல்டோசர் ஆக்ஷனை எடுத்த ஹரியானா.. 250 வீடுகள் இடிப்பு
சண்டிகர்: வங்காளதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அமைத்த வீடுகளை நேற்று அரசு ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்ததாகக் கூறி புல்டோசர்களை கொண்டு ஹரியானா மாநில அரசு தகர்த்தது
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். அங்குள்ள நூ மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது, ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் வன்முறை பரவியது. இந்த வன்முறையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது. வன்முறை சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
144 தடை உத்தரவு: மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுவரை கலவரம் தொடர்பாக, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது நூ மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
நூ, பரிதாபாத், பல்வால் உள்பட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஹரியானாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், ஹரியானாவில் நிலவும் அசாதாரண சூழலால் குருகிராமில் உள்ள முன்னணி நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

250 வீடுகள் அகற்றம்: ஊழியர்கள் பலரையும் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலமையை கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.நூ மாவட்ட எஸ்பியாக உள்ள வருண் சிங்லா அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நூ மாவட்டத்தில் இருந்து பீவானி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு பதிலாக நூ மாவட்ட எஸ்பியாக நரேந்திர பீஜார்னியா நூ மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, நூ மாவட்டத்தில் இருந்து சற்றேறக்குறைய 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள தவுரு நகரில் தங்கியிருக்கும் வங்காளதேச நாட்டவர்களின் கொட்டகைகளை புல்டோசர்களை கொண்டு மாவட்ட நிர்வாகம் நேற்று இடித்து தள்ளியது. அரசு நிலத்தில் ஆக்கிரமித்து இருந்ததாக கூறி சுமார் 250 வீடுகளை அகற்றியது.
இடித்து தரைமட்டம்: எனினும், இந்த நடவடிக்கை, வன்முறையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், மோதலில் குடியேறியவர்களே(immigrants ) காரணம் என்று மாவட்ட நிர்வாகமும், ஹரியானா முதல்வரும் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தான் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வங்காளதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி அசாமில் தங்கியிருந்த பலரும் பிறகு ஹரியானாவிற்கு வந்ததாகவும் ஹரியானா நகர ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 250 வீடுகளை அமைத்து தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே இவர்கள் தங்கியிருக்கும் நிலையில், நேற்று அவர்கள் தங்கியிருந்த சிறிய ரக வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications