ரேஷன் லாரியின் டயரை ஆய்வு செய்யலாமா.. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏவை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ரேஷன் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியை தவெக எம்எல்ஏ அன்னை ஜி. சரவணன் ஆய்வு செய்தார். டயர் மிகவும் வழுக்கும் வகையில் உள்ளதே என்று லாரியில் ரேஷன் பொருட்கள் கொண்டு வந்த நிறுவனத்தின் மேலாளரிடம் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து லாரியின தன்மையை ஆய்வு செய்த எம்எல்ஏ சரவணன், பதிவு எண் அழிக்கப்பட்டது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனிடையே லாரி உரிமையாளர் தரப்பு மிரட்டியதாக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். இந்த சூழலில் தவெக எம்எல்ஏ அன்னை ஜி. சரவணன் லாரியை ஆய்வு செய்ததையே கிண்டல் செய்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை ஜி சரவணன் அண்மை காலத்தில் அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். சர்ச்சைகள் காரணமாகவும், அவரது புகார்கள் காரணமாகவும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருடன் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார். எனினும் முதல்வர் விஜய்க்கு இவர் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான புகார்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு அடுத்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணன் அண்மையில் திமுக குதிரை பேரம் நடத்தியதாக ஊடகங்களில பேசியதுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ரூ.50 கோடி வரை பேரம் பேசினார்கள். லாரி ஏற்றிக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். எம்.எல்.ஏ குடியிருப்புக்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். நான் யாருக்கும் விலை போக மாட்டேன்" என்று கூறியிருந்தார். இதுவும் பெரிய அளவில் விவாதமாக மாறியது. இதனை அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். இந்த சூழலில் எம்எல்ஏ சரவணன் அடுத்ததாக தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் ரேஷன் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியை ஆய்வு செய்தார். அதுவும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதுக்குடிக்கு ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. நியாய விலை கடைக்கு பொருட்களை இறக்க வந்த அந்த லாரியை தொகுதி எம்எல்ஏ ஜி சரவணன் நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது டயர்கள் மிகவும் வழுக்கும் தன்மையுடன் உள்ளது குறித்து லாரி உரிமையாளரின் மேலாளரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் ஸ்டெப்னி வைத்துள்ளோம். தேவை என்றால மாட்டிக்கொள்வோம் என்றார். தொடர்ந்து லாரியின் முன்புறம் மற்றும் பின்புறம் பதிவு எண் அழிக்கப்பட்டதாக கூறி கேள்வி எழுப்பினார். இப்படி லாரியை சுற்றி சுற்றி எம்எல்ஏ சரவணன் ஆய்வு நடத்தினார். வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் லாரியின் பாதுகாப்பு குறித்தும் சந்தேகத்தை எழுப்பினார். இது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பலரும் எம்எல்ஏ சரவணனின் லாரி ஆய்வு வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக ஆதரவு நெட்டிசன் ஒருவர். ஆய்வு என்கிற பெயரில் கான்ட்ராக்டர்களை மிரட்டுவது நல்லாவே தெரியுது .. தப்பு இருந்தா அதிகாரிகள் மூலமா தான போய் நடவடிக்கை எடுக்கனும் .. அப்புறம் அவங்க எதுக்காக .. படத்துல வர முதல்வன் ஹீரோ மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ணியே ஆகணும் .. ஊருக்குள்ள எம்எல்ஏவுக்கு உண்டான மரியாதையே போச்சு என்று கிண்டல் செய்துள்ளார்.
அதேநேரம் எம்எல்ஏ சரவணனுக்கு ஆதரவாக தவெகவினர் பதிவிடுவதை காண முடிந்தது. லாரி டயர் வழுக்கும் நிலையில் உள்ளது. பிரேக் பிடிக்காமல் யார் மீதாவது மோதினால் என்னாகும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி இருதரப்பு மாறிமாறி கேள்விகளை கேட்டபடி வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications