"இது தேவையா?".. லஞ்சப் பணத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்கிய போலீஸ் எஸ்ஐ.. 'பரபர' சம்பவம்
சண்டிகர்: ஹரியானாவில் திருட்டு வழக்கு ஒன்றில் நடவடிக்கை எடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர், தான் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதை அறிந்ததும் அந்த லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லஞ்சம் வாங்கியது வீடியோவில் பதிவானது தெரிந்த பிறகும் கூட, பதற்றத்தில் அந்த போலீஸ்காரர் ஒரு கட்டுப் பணத்தை விழுங்கினார்.
பின்னர், அவரது தொண்டைக்குள் கையை விட்டு ஏதோ புதையலை எடுப்பது போல போலீஸார் அந்தப் பணத்தை மீட்டிருக்கின்றனர்.

'சின்சியர் ஆபிசர்'
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் மகேந்திர உலா (47). ஒரு சிறு திருட்டுச் சம்பவம் என்றாலும், புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் வாங்கிவிட்டு தான், சம்பவம் என்ன என்று கேட்கும் அளவுக்கு 'சின்சியர்' ஆபிசராக வலம் வந்திருக்கிறார் மகேந்திர உலா. இவர் மீது கடந்த சில மாதங்களாகவே லஞ்ச புகார்கள் குவிந்திருக்கின்றன. எனினும், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் மாட்டாமல் போக்கு காட்டி வந்திருக்கிறார் மகேந்திர உலா.

எருமை திருட்டு கேஸுக்கு லஞ்சம்
இந்நிலையில்தான், கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவர், தனது பண்ணையில் இருந்த எருமை மாட்டை சிலர் திருடிச் சென்றுவிட்டதாக எஸ்.ஐ. மகேந்திர உலாவிடம் புகார் அளித்தார். அப்போது மகேந்திர உலா, இந்த வழக்கை பதிய வேண்டும் என்றால் தனக்கு ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி, அட்வானஸ் லஞ்சமாக ரூ.6 ஆயிரத்தை எஸ்.ஐ. மகேந்திர உலாவிடம் கொடுத்திருக்கிறார் ஷுப்நாத்.

கையும் களவுமாக மாட்டிய எஸ்.ஐ.
இதனிடையே, எஸ்.ஐ. மகேந்திர உலா குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஷுப்நாத் புகார் அளித்தார். பின்னர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மீதி லஞ்சப் பணமான ரூ.4 ஆயிரத்தை கொடுப்பதற்காக ஷுப்நாத் சென்றார். அந்தப் பணத்தில் கைரேகை பதியும் பவுடரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தடவியிருந்தனர். இதையடுத்து, அந்த லஞ்சப் பணத்தை ஷுப்நாத்திடம் இருந்து எஸ்.ஐ. மகேந்திர உலா வாங்கிய போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அப்படியே விழுங்கிய எஸ்.ஐ.
இந்நிலையில், தான் பிடிபட்டு விட்டோம் என்ற பதற்றத்தில், லஞ்சப் பணமான ரூ.4000 அடங்கிய பணக்கட்டை அப்படியே தனது தொண்டையில் திணிந்து விழுங்கினார் மகேந்திர உலா. இதை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரை சுற்றிவளைத்து பிடித்து அவரது தொண்டைக்குள் கைவிட்டு பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால், மகேந்திர உலா தொடர்ந்து திமறிக் கொண்டிருந்ததால் அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. பின்னர் அவரது வாயை ஒரு போலீஸ் அதிகாரி திறந்து வைக்க, மூன்று பேர் அவர் கை, கால்களை பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி அவரது தொண்டைக்குள் கையை விட்டு அந்த பணக்கட்டை எடுத்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications