"ஜாட் + ஓபிசி+ தலித்.." இதுதான் ஹரியானா தேர்தல் கணக்கு.. முட்டி மோதிக் கொள்ளும் பாஜக vs காங்கிரஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நாளை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ஹரியானா தேர்தல் களம் எந்த மாதிரி இருக்கிறது.. அங்கு முக்கிய பிரச்சினை என்ன.. மக்கள் மனநிலை என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஹரியானா மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து நாம் புரிந்து கொள்ள அங்குள்ள சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் தான் ஹரியானா அரசியலைத் தீர்மானிக்கிறது.

வேறுபாடு: ஹரியானா மாநிலத்தில் கிராமம் மற்றும் நகரத்திற்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இது அரசியல் ரீதியாகவும் எதிரொலிக்கிறது. டெல்லிக்கு மிக அருகில் உள்ளதால் உள்ள பகுதிகள் நகரமயமாக்கல் காரணமாகப் பலன் பெற்றுள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ளதால்.. செல்வந்தர்கள் அதிகம் இங்கு தான் வசிக்கிறார்கள்.. குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளும் பஞ்சாபிற்கு அருகே உள்ள அம்பாலா, பானிபட் மற்றும் குருக்ஷேத்ரா ஆகிய நகரங்களும் இதற்கு உதாரணம்.
மறுபுறம் தெற்கு மற்றும் மத்திய ஹரியானா பகுதிகள் கிராமங்கள் நிறைந்தவை. ஹரியானா அரசியலை தீர்மானிக்கும் பெரும்பான்மை ஜாட் சமூகத்தினர் வசிக்கும் பகுதி இதுதான். அங்கு ஆட்சி அதிகாரத்தையே தீர்மானிக்கும் சக்தியாக ஜாட் சமூகத்தினர் உள்ளனர். அங்கு இந்த மக்கள் எதிர்கொள்ளும் 3 பிரச்சினைகளைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதாக உள்ளது..
3 விஷயங்கள்: முதலில் விவசாயிகள் போராட்டம். விவசாய சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், அப்போது நடந்த சில சம்பவங்கள் ஜாட் சமூகத்தினரைப் பாதித்துள்ளது. இது தவிர அக்னிவீர் திட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் ஆகியவையும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. மேலும், மாநிலத்தில் வேலையின்மை அதிகரிப்பதாகவும் ஜாட் சமூக இளைஞர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளன. இவை எல்லாம் பாஜக எதிர்ப்பு வாக்குகளாக மாறுகின்றன.
பாஜக: மறுபுறம் தொழில்துறை பகுதிகளில் பாஜக செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஓபிசி பிரிவினர் பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்கள். பிரதமர் மோடியின் இமேஜ் இதற்கு முக்கிய காரணம். அதேபோல அங்குள்ள பிராந்திய கட்சிகள் ஜாட் சமூகத்தினர் இடையே மட்டுமே செல்வாக்கு கொண்டதாக உள்ளன. பாஜக எதிர்ப்பு வாக்குகளை இது பிரிக்கும். இந்த இரண்டும் பாஜகவுக்கு பிளஸ்.
மேலும், ஜாட் சமூகத்தினர் காங்கிரஸ் பக்கம் நகர்வதால் இயல்பாகவே ஜாக் அல்லாதோர் வாக்குகள் பாஜக பக்கம் வருகிறது. ஹரியானா மக்கள் தொகையில் இந்த ஒபிசி வாக்குகள் 25% வரை இருப்பதால் இது முக்கியமானது. அதேநேரம் ஹரியானாவில் பாஜகவின் ஒபிசி முகமாக அறியப்படும் கரண் தேவ் காம்போஜ் காங்கிரஸுக்கு தாவியது பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு. இது ஓபிசி வாக்குகள் காங்கிரஸ் ஓரளவுக்குச் செல்வதை உறுதி செய்யும்.
காங்கிரஸ்: இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றொரு புதிய விஷயத்தையும் முயல்கிறது. அதாவது ஜாட் மற்றும் தலித் வாக்காளர்களுக்கு இடையே ஒரு கூட்டணியை உருவாக்குவதே அது. ஆனால், அங்கு நீண்ட காலமாகவே இரு சமூகங்களுக்கும் இடையே சிக்கலான உறவு இருப்பதால் இது எந்தளவுக்குச் சாத்தியப்படும் எனத் தெரியவில்லை. ஆனாலும், இரு தரப்பிற்கும் பிரதிநிதித்துவம், முக்கிய தலைவர்களுக்கு வாய்ப்பு என புது ரூட்டை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கும் சில சிக்கல்கள் உள்ளது. அங்குக் காங்கிரஸில் பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இடையே ஒற்றுமை இல்லை. இதுபோல தலைவர்கள் தனித்து இயங்குவது பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் நோக்கி வருவதைத் தடுக்கிறது. குறிப்பாகக் குமாரி செல்ஜா காங்கிரஸின் தலித் முகமாகப் பார்க்கப்படும் நிலையில், அவர் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் காங்கிரஸுக்கு தலைவலியைத் தருகிறது.
ஹரியானாவில் இப்போது நிலவும் அரசியல் களம் இதுதான். அங்கு நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அரசியல் களம் பரபரப்பானதாக மாறியுள்ளது. இரு கட்சிகளுக்கும் பிளஸ், மைனஸ் என இரண்டும் இருப்பதால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது அக். 8 தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications