முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்.. விரைவில் குணமடைய வேண்டி பிரியங்கா, ராகுல் காந்தி ட்விட்
சண்டிகர்: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மோசமானது. இதையடுத்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் குணமடைய வேண்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ட்விட் வெளியிட்டுள்ளனர்.

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவரான இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். 1989 முதல் 91 வரை, பின்னர் 1993 முதல் 95 வரை, பிறகு 2003 முதல் 2007 வரை அவர் முதல்வராக இருந்துள்ளார்.
அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் டாக்டர்கள் முலாயம் சிங் யாதவை ஐசியூ வார்டுக்கு மாற்றி அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது வெளியில் இருந்து கட்சி தொண்டர்கள் யாரும் ஆஸ்பத்திரி முன்பு கூட வேண்டாம் என்றும்.. அவரது உடல் நிலை சீரானதும் வந்து பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் அவரது மகனும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், முலாயம் சிங் யாதவ் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், 'முலாயம் சிங் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்த தகவல் கேட்டு நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம். அவர் விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தியும் முலாயம் சிங் யாதவ் விரைவில் பூரண குணம் அடைய விரும்புவதாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications