பீகார் அரசியலின் முக்கிய தலைவர்.. சரத் யாதவ் மறைவு! பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
சண்டிகர்: பீகார் அரசியலின் மிக முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வட மாநில அரசியல் களத்தில் பீகார் தனித்துவமானது. மற்ற மாநிலங்களில் மதம் அரசியலோடு கலந்து வேறு இடத்திற்கு அரசியலை நகர்த்தியது. ஆனால் பீகாரின் அரசியல் தலைவர்கள் இந்த நகர்வை தங்களது மாற்று அரசியல் மூலம் கட்டிப்போட்டு வைத்திருந்தனர். அப்படி மாற்று அரசியல் களத்தை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவர்தான் சரத் யாதவ். கல்லூரி காலத்திலேயே மாணவர் தலைவராக இவர் உருவெடுத்திருந்தார்.
படித்தது மருத்துவமாக இருந்தாலும் அரசியல் பாடத்தின் மீதுதான் இவருக்கு தீராத ஆர்வம் இருந்தது. அப்படி இவரது ஆர்வத்திற்கு தீனியிட்டவர் 'ராம் மனோகர் லோகியா'. மாணவர் தலைவர், இளைஞரணி தலைவர் அதன் பின்னர் மிசாவில் கைது அங்கு கிடைத்த அரசியல் அனுபவம் எல்லாம் இவரை மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவாக்கியது. அதன் பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தை உருவாக்கினார்.

பாஜக
அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டம். அவருடன் அரசியல் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் பல துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். தற்போது வரை 7 முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் பாஜகவுடன் இவருக்கு பல தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு தேர்தலை பாஜகவுடன் கைகோர்த்து எதிர்கொள்ள நிதிஷ் குமார் தீர்மானித்த நிலையில் இவர் சண்டையிட்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.

பாஜக எதிர்ப்பு
அதன் பின்னர் 2018ம் ஆண்டு 'லோக் தந்த்ரிக் ஜனதா தளம்' எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சி எதிர் பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை எனவே பாஜகவை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தனது கட்சியை லாலு பிரசாத்தின் 'ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன்' 2022ம் ஆண்டு இணைத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டிருந்த சரத் யாதவ் ஓரிரு நாட்களுக்கு முன்னர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழப்பு
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இயற்கை எய்தினார். இவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், சரத் யாதவ் மறைவுக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில், "அண்ணன் சரத் யாதவ் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் நானும் ராம் மனோகர் லோஹியா மற்றும் கர்பூரி தாக்கூரிடம் இருந்து சோசலிச அரசியலைக் கற்றுக்கொண்டோம்.

பிரதமர் மோடி
பல தருணங்களில் நானும் சரத் யாதவும் ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டோம். ஆனால் இது கருத்து மோதல் சண்டையாகதான் இருந்தது. எனவே இந்த சண்டைகள் எங்களிடையே எந்த பிளவையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். அதுபோல பிரதமர் மோடி, "சரத் யாதவ் மறைவு வேதனையளிக்கிறது. நீண்ட காலமாக எம்பியாகவும், அமைச்சராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நான் எப்போதும் இவரை போற்றுவேன். சரத் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications