அசெம்பிள் ஆன என்.டி.ஏ கூட்டணி மாநில முதலமைச்சர்கள்.. முக்கிய ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!
சண்டிகர்: சண்டிகரில் இன்று பாஜகவை சேர்ந்த முதல்வர் நயாப் சிங் சைனி பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு என்.டி.ஏ கூட்டணி முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி தலைமை வகித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மாநாடு இன்று சண்டிகரில் நடைபெற்றது. ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, பிஹார் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மேகாலயா முதல்வர் கோனார்ட், மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

என்டிஏ கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணி முதல்வர்களின் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடந்துள்ளது.

இந்த கூட்டம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "என்டிஏ முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நல்லாட்சி நடத்துவது குறித்தும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் விரிவாக விவாதித்தோம். நாட்டின் முன்னேற்றத்திலும் ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் எங்கள் கூட்டணி உறுதிபூண்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications