பஞ்சாபில் நாளை சட்டசபைத் தேர்தல்-விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு..பாஜகவுக்கு முதல் அக்னி பரிட்சை!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நாளை காலை நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு பஞ்சாப் தேர்தலை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 2.14 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்காளர்கள் நாளைய தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 117 தொகுதிகளிலும் மொத்தம் 1,304 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று முனைப் போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும் ஆம் ஆத்மி பல இடங்களில் வெற்றி பெறும் என தெரியவருகிறது.

காங்கிரஸ்
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மத்தியில் பஞ்சாப் காங்கிரஸ் மீது பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை. விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் களத்தில் இறங்கியது. முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு, சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார். தலித் சீக்கிய முதல்வர் என்ற பார்வை அவருக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. தற்போதும் சரண்ஜித் சிங்கே காங்கிரஸ் சார்பாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே காலூன்றி வருகிறது. ஆம் ஆம்தி முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறி, அதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 21 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று பகவந்த் மான் தேரானார். இவருக்கு பஞ்சாப் மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆம் ஆத்மி செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு என எதிர்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக
விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என டெல்லியில் பஞ்சாப் விவசாயிகல் போராடம் நடத்தினர். ஓராண்டு காலம் போராட்டம் நீடித்தது. 700 விவசாயிகள் இதில் பலியானார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு விவசாய சட்டத்தை திரும்ப பெற்றது மத்திய அரசு. விவசாயிகள் மரணத்துக்கு பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை என பஞ்சாப் மக்கள் பாஜக மீது கோவத்தில் இருக்கிறார்கள். பாஜகவுடன் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸும் சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. ஆனாலும் பஞ்சாபில் பாஜகவுக்கு பெரிய
வெற்றிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications