தனியார் மருத்துவனைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் முடிவை வாபஸ் பெற்றது பஞ்சாப் அரசு
சண்டிகர்: கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு வழங்கும் தனது முடிவை பஞ்சாப் அரசு வாபஸ் பெற்றுள்ளது சரியாக ஆராயப்படாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதால் அதை வாபஸ் பெறுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த இரு தடுப்பூசிகளுக்குமே நாடு முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது.. எல்லா மாநிலங்களுமே குறைந்த விலை அல்லது இலவசமாக தடுபபூசி போடுகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாப் அரசு கோவாக்சின் தடுப்பூசியை 400 ரூபாய்க்கு வாங்கி, தனியார் மருத்துவமனைக்கு 1060 ரூபாய்க்கு விற்றது. தனியார் மருத்துவமனைகளோ 1500 ரூபாய்க்கு ஒரு டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு விற்கின்றன. இதற்கு பாஜக மற்றும் சிரோன்மணி அகாலிதளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அகாலிதளம் கட்சி
மொகாலியில் செய்தியாளர்களை சந்தித்த சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பிர் பாதல், கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோஸ் ரூ.400 என பஞ்சாப் அரசு கொள்முதல் செய்கிறது. அதை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,060 என்று விற்பனை செய்கிறது. இதன் மூலம் பஞ்சாப் அரசுக்கு ரூ.660 லாபம் கிடைத்துள்ளது.. இவ்வாறு மாநில அரசு, ஒரு நாளைக்கு 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசியை விற்பனை செய்து ரூ.2 கோடி வருமானம் ஈட்டி உள்ளது

விசாரணைக்கு கோரிக்கை
தனியார் மருத்துவமனைகள், ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.1,560 வசூல் செய்கின்றன. இதனால், ஒரு குடும்பத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் செலவு செய்யும் நிலை உள்ளது. காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை முறையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்

கோவாக்சின்
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது. ராகுல் காந்தி மற்றவர்களுக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, அவரது கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தை கவனிக்க வேண்டும். பஞ்சாப் அரசுக்கு ஒரு டோஸ் 400 வீதம் 1.40 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த மருந்தினை 20 தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்திருக்கிறார்கள் எனறு எதிர்ப்பு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர்
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து கூறும் போது,, தடுப்பூசி குறித்த கட்டுப்பாடு தன்னிடம் இல்லை. சிகிச்சை, ஆய்வு , கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை மட்டுமே நான் கவனித்து வருகிறேன். தடுப்பூசி விற்பனை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

பஞ்சாப் அரசு
இந்த சூழலில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி அளவை தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு வழங்கும் தனது முடிவை பஞ்சாப் அரசு வாபஸ் பெற்றுள்ளது , ஏனெனில் சரியாக ஆராயப்படாமல் இந்த முடிவெடுக்கப்பட்டிருந்ததால் வாப்ஸ் பெற்றதாக பஞ்சாப் அரசு கூறியுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசி அளவுகளையும் திருப்பித் தருமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாக தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை பெற்ற உடன், அரசிடம் இருந்து வாங்கி பயன்படுத்திய அளவுகளை திருப்பித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications