‛‛ஜன.26-ல் பஞ்சாப் முதல்வர் கொல்லப்படுவார்’’.. காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் பகீர் மிரட்டல்.. ஷாக்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில டிஜிபி ஆகியோரை குடியரசு தினவிழாவில் கொல்ல அனைவரும் இணைய வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக பஞ்சாப் உள்ளது. இந்நிலையில் தான் பஞ்சாப்பில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனை இந்தியா ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக சிலர் வன்முறையை தூண்டினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருப்பினும் தற்போது வரை காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை என்பது தொடர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருக்கும் சீக்கிய பயங்கரவாதிகள் வீடியோக்கள் வெளியிட்டு இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தடை செய்யப்பட்ட எஸ்எப்ஜே எனும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியா தொடர்ந்து மிரட்டில் விடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். இதனால் இவரை பயங்கரவாதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் இவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக அமெரிக்கா இந்தியா மீது குற்றம்சாட்டியது. ஆனால் அதனை இந்தியா முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில் தான் குடியரசு தினவிழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் ஆகியோர் கொலை செய்யப்படுவார்கள் என குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இதனை நிகழ்த்தி காட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இந்த மிரட்டலுக்கு பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்களை கண்டறிந்து டிஜிபி கவுரவ் யாதவ் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த விஷயத்தில் முதல்வர் பகவந்த் மானும் உறுதியாக செயல்பட்டு வருகிறார். இதனால் தான் அவர்கள் 2 பேரையும் கொலை செய்ய உள்ளதாக குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த குர்பத்வாந்த் சிங் பன்னுன் இப்படி மிரட்டல் விடுப்பது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பும் பல மிரட்டல்களை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அவர் வெளியிட்ட வீடியோவில் இந்திய நாடாளுமன்றம் மீது டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்பு தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். அதற்கு முன்பாக கடந்த நவம்பர் 19ல் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் இந்தியர்களை சிறை பிடிப்பதற்காக அவர் மிரட்டி இருந்தார்.


Click it and Unblock the Notifications
