ஹரியானா: 10 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆட்சியை கைப்பற்ற முடியாத காங்கிரஸ்-ஹூடா மீது செல்ஜா கடும் தாக்கு!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்ல முடியாமல் போனதற்கு காரணமானவர்களை கட்சி மேலிடம் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜா போர்க்கொடி தூக்கி உள்ளார். முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என மறைமுகமாக குமாரி செல்ஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களையும் காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றியது. இன்றைய வாக்குப் பதிவின் தொடக்கத்தில் காங்கிரஸ்தான் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தது. ஆனால் சில மணிநேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது.

ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். தற்போது பாஜக பெரும்பான்மை பலத்துடன் தனித்தே ஆட்சியை அமைக்கிறது. ஹரியானா சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து 3 -வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக.
அதேநேரத்தில் 10 ஆண்டுகளாக பாஜகவிடம் தொடர்ந்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவிக் கொண்டே இருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா காங்கிரஸ் முகங்களான மாஜி முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் லோக்சபா எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா இருவருக்கும் இடையேயான கோஷ்டிப் பூசல் நாடறிந்த ஒன்றாகிவிட்டது. சட்டசபை தேர்தல் பிரசார களத்தில் திடீரென குமாரி செல்ஜா காணாமல் போக, பாஜக பக்கம் தாவப் போவதாக வதந்திகள் கிளம்பின. பின்னர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்து இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் குமாரி செல்ஜா.
தற்போது ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி இருக்கும் நிலையில் பூபிந்தர் சிங் ஹூடா மீது மறைமுகமாக குற்றம் சாட்டி இருக்கிறார் குமாரி செல்ஜா. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த குமாரி செல்ஜா, 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். 3 தேர்தல்களிலும் தொடர் தோல்விதான் கிடைத்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய ரணம் இது. இந்த தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் வேண்டுகோள் என்றார். ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்தவர் பூபிந்தர் சிங் ஹூடா. ஆகையால்தான் அவரது பெயரை குறிப்பிடாமல் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் குமாரி செல்ஜா.












Click it and Unblock the Notifications