இப்படியும் ஒரு தம்பியா.. 174 செக் மோசடிகள்.. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக்கின் சகோதரர் கைது!
சண்டிகர்: செக் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் சகோதரர் வினோத் சேவாக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 174 செக் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 138 வழக்குகளில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தவர் வீரேந்தர் சேவாக். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் 8,586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்களையும் விளாசி இருக்கிறார். சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக ஆடிய அவர், அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

அதன்பின் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த அவர், தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரின் மகன் ஆர்யவீர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கவனத்தை ஈர்த்து வருகிறார். அண்மையில் சேவாக் மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செக் மோசடி வழக்கில் சேவாக் சகோதர் வினோத் சேவாக் கைதாகி இருக்கிறார். ஜல்தா ஃபுட் மற்றும் பெவரேஜஸ் நிறுவனத்தை வினோத் சேவாக், விஷ்ணு மிட்டல் மற்றும் சுதீர் மல்ஹோத்ரா ஆகிய மூவரும் நடத்தி, இயக்குநர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மூவரும் தங்களின் நிறுவனத்திற்காக ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மோகன் என்பவரின் ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் வாங்கி இருக்கின்றனர். அதற்காக ரூ.7 கோடி செக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செக்கை வங்கியில் கிருஷ்ணா மோசன் டெபாசிட் செய்த போது, அந்த செக் பவுன்ஸாகி இருக்கிறது.
இதற்கான காரணம் குறித்து அறிகையில், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் கிருஷ்ணா மோகன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த விசாரணைக்கு அவர்கள் மூவரும் ஆஜாராகாத நிலையில், 2023ஆம் ஆண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் வீரேந்தர் சேவாக்கின் சகோதர் வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். அதன் விசாரணை மார்ச் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. மேலும், வினோத் சேவாக் மீது 174 செக் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்காக 138 வழக்குகளில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications