பஞ்சாப் "சர்ப்ரைஸ்".. விளக்குமாறுடன் வரும் கெஜ்ரிவால்.. ஆம்ஆத்மி எழுச்சிக்கு காரணம் என்ன?
பஞ்சாப் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சண்டிகர்: பஞ்சாப்பை ஆம் ஆத்மிதான் ஆளபோகிறது என்ற தகவல்கள் கணிப்புகளுடன் வட்டமடித்து வந்தாலும், எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வெற்றி பெற போகிறது என்ற விவாதமும் தற்போதே எழுந்துவிட்டது.. மற்றொருபக்கம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றிக்கான சீக்ரெட்கள் என்ன என்பதையும் இப்போதே நிபுணர்கள் அலச தொடங்கிவிட்டனர்.
Recommended Video
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 2.2 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, மற்றவர்கள் 15, அதிலும் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.
ஆனால் 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலின்போது பாஜகவின் செல்வாக்கு ஒரேயடியாக எகிறியது.. ஆனால், பாஜகவைவிட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசின் செல்வாக்குதான் அதிகம் உள்ளது... எனவே ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி அப்போது ஏற்பட்டது..!

கெஜ்ரிவால்
கடந்த முறை தேர்தலில், மொத்தமுள்ள 77 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது... பாஜகவோ வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது... ஆம் ஆத்மி கட்சியோ, 20 தொகுதிகளை வென்று 2 பெரிய கட்சியாக பஞ்சாப்பில் விஸ்வரூபம் எடுத்தது.. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை. அதுவும், சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய முத்திரையை பதித்தது.. 14 இடங்களை கைப்பற்றினாலும், மேயர் தேர்தலில் தோல்வியை தழுவியது என்னவோ லேசான சறுக்கல்தான்.. ஆனால், இந்த வெற்றிதான், பஞ்சாப்பில் தன்னை நிலைநிறுத்திக்க ஆம்ஆத்மிக்கு அடித்தளமாக இருந்தது.

வாக்குகள்
சண்டிகரில் தனக்கிருக்கும் செல்வாக்கையும், தன் கட்சிக்கு விழுந்து வாக்குகளையும் அப்படியே தக்க வைத்து கொள்ள ஆம் ஆத்மி பலவிதமான முன்னெடுப்புகளை எடுத்தது.. இதன் பலன் தேர்தலுக்கு முந்தைய வெளியாகிய கருத்துக்கணிப்புகளிலேயே வெளிப்பட்டது.. ஆம் ஆத்மிக்கு நிறைய சாதகமான சூழல் இருப்பதாக கூறப்பட்டது அக்கட்சிக்கு மேலும் தெம்பை தந்தது.. எனினும் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் கெஜ்ரிவால் கவனமாக செயல்பட்டார்.. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தார்.. பிறகு 2 பேர் சாய்ஸ்களை அம்மாநில மக்களிடம் வெளிப்படுத்தினார்.

முதல்வர் வேட்பாளர்
இதற்காகவே, "ஜனதா சுனேகி ஆப்னா சி.எம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை மக்களிடம் அறிமுகம் செய்தார்.. ஒருவர் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் பக்வந்த் சிங் மான் மற்றும் மாநில பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோரில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த போவதாகவும், 70748 70748 என்ற போன் நம்பரில் தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை முன்மொழியலாம் என்று சாய்ஸ் தந்தார். இறுதியில் பகவந்த் சிங் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கவர்ச்சி திட்டங்கள்
இதற்கு பிறகு கெஜ்ரிவால் மேற்கொண்ட பிரச்சாரங்கள் மக்களை ஈர்க்க ஆரம்பித்தன.. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்திற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.. நாட்டிலேயே மின்சார செல்வு டெல்லியில்தான் மிகக்குறைவு... இதை எங்களால் அங்கு செய்யும்போது, பஞ்சாப்பிலும் ஏன் இதை செய்யக்கூடாது? என்று கெஜ்ரிவால் எழுப்பிய கேள்வியும் நியாயமாகவே பார்க்கப்பட்டது.. இதைதவிர, மாதந்தோறும் பெண்களுக்கு உதவித்தொகை தருவதாக அறிவித்தது. இது பஞ்சாப் பெண்களை ஆம் ஆத்மி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது..

இன்று முடிவு
இதெல்லாம் சேர்ந்துதான் ஆம் ஆத்மிக்கு ஒரு புதிய எழுச்சியை பஞ்சாபில் ஏற்படுத்தியது.. தேர்தலுக்கு முந்தைய கணிப்பில், ஆம் ஆத்மியின் வெற்றியை பார்த்துவிட்டு, பஞ்சாபில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதை ஓட்டுப்பதிவு முடிந்தவுடனேயே பாஜகவினர் சொல்லிவிட்டதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. அதேபோல, பஞ்சாப்பை கைப்பற்ற கெஜ்ரிவாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தலுக்கு பிந்தைய 6 கருத்துக்கணிப்புகளும் உறுதிபடுத்தி உள்ளதையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. மொத்தத்தில் காங்கிரசின் வீழ்ச்சி ஆம் ஆத்மிக்கு லாபமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications