தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பாஜக.. ஹரியானாவில் திடீரென மேலே வந்து வென்றது எப்படி? என்ன நடந்தது?
சண்டிகர்: ஹரியானாவில் பாஜக மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில்.. திடீர் திருப்பமாக ஒன்றரை மணி நேர வாக்கு எண்ணிக்கைக்கு பின்.. சூழ்நிலை மாறிய நிலையில் தற்போது பாஜக வெற்றியை நோக்கி சென்றுள்ளது.
ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக முன்னிலையை பெற்று உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன. ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. இந்த நிலையில் பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட அங்கே ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. பாஜக மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிப்பதோடு.. அங்கே கிளீன் ஸ்வீப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

மாறாக காங்கிரஸ் அங்கே கடுமையான தோல்வி அடையும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. ஹரியானாவில் கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
பாஜக - 89 இடங்களில் போட்டி
இந்தியா கூட்டணி - காங்கிரஸ் 89 இடங்களில் போட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்தில் போட்டி
ஜேஜேபி - ஏஎஸ்பி(கேஆர்) கூட்டணி: ஜனநாயக ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டி, ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 இடங்களில் போட்டி
ஆம் ஆத்மி - 88 இடங்களில் போட்டி
ஹரியானா தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட 68 சதவிகித வாக்குகள் வரை இந்த தேர்தலில் பதிவாகி உள்ளன.
காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?:
1966 ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்ட ஹரியானாவில் இதுவரை எந்தக் கட்சியும் ஹாட்ரிக் வெற்றி பெறாததால் பாஜகவின் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தியே இருந்தது. காங்கிரஸ் வெல்லுமா என்றெல்லாம் பேச்சே இல்லை.. காங்கிரஸ் எவ்வளவு வேறுபாட்டில் வெல்லும் என்பதே விவாதமாக இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இதையே கணித்தன.
ஆனால் யாரும் யோசிக்க முடியாததை பாஜக செய்து சாதித்து உள்ளது. இது எப்படி சாத்தியமானது?
ஜாட் சமூக வாக்குகள்: ஜாட் சமூகத்தினர் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்பட்டது. இதனால் மற்ற சாதியினர் காங்கிரசுக்கு எதிராக திரும்பினர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.. காங்கிரசுக்கு ஜாட் வாக்குகளும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு ஜாட்கள் காங்கிரசுக்கு வாக்களித்தது போல் தெரியவில்லை. ஜாட்கள் பெரும்பான்மையாக உள்ள 36 இடங்களில் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மக்களவையில், 36 ஜாட் தொகுதிகளில் 27 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் ஜாட் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் போராடும் காங்கிரஸ் சட்டசபை தேர்தலில் அதே மேஜிக்கை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பாஜகவிற்கு வாக்களித்த நகர்ப்புற வாக்காளர்கள்;
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக வெற்றிபெற தெற்கு ஹரியானாவில் அஹிர்வால் பெல்ட்டில் BJP அதிக வாக்குகளை வாங்கியது ஒரு காரணம். இந்த பகுதிதான் 2024லும் BJP க்கு விசுவாசமாக இருந்துள்ளது. 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அஹிர்வால் பகுதியில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.
லோக்சபா தேர்தலில் கூட, 11 சட்டசபை தொகுதிகளில், 10 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக வாக்களித்தன. இப்போது 11லும் பாஜக சட்டசபை தேர்தலில் வென்றது. குருகிராம் முழுக்கவும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தது.
குருகிராம் பாஜக எம்பியும், மத்திய அமைச்சருமான ராவ் இந்தர்ஜித் சிங் அங்கே கேம் சேஞ்சராக திகழ்ந்தார். அஹிர்வால் தலைவரான இவர், 2024 ஆம் ஆண்டு முன்னதாக ஆறாவது முறையாக எம்பியாக வெற்றி பெற்றார். அஹிர்வால் பகுதியில் பிஜேபியின் பிரச்சாரத்தை அவர் வழிநடத்தி அங்கே கட்சியின் வெற்றிக்கும் காரணமாக மாறி உள்ளார்.
இப்படி ஹரியானாவில் நகர்ப்புற வாக்காளர்கள் முழுக்க முழுக்க பாஜகவுக்கு விசுவாசமாக இருந்தனர். நகர்ப்புற மையங்களில் உள்ள இடங்களை பாஜக கைப்பற்றியது காங்கிஸுக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது.
மூன்றாவது காரணம்; மூன்றாவது பெரிய காரணம், தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாக ஹரியானாவின் முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனியின் தலைமையில் பாஜக ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொண்டதுஅமைத்தது.
ஆனால், காங்கிரஸில் உள்ள தலைவர்கள், வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டது. தீவிரமான உட்கட்சி மோதல் காரணமாக, அந்த கட்சி பெரிதாக தேர்தல் பணிகளை செய்யாமல் வீழ்ச்சி அடைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications