பலிக்குதா காங்கிரஸ் கனவு.. "ஹரியானாவின் சுயமரியாதையை பறித்த பாஜக?.. முடிவுக்கு வருதா 10 வருட ஆட்சி?
சண்டிகர்: ஹரியானாவில் 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்குமா? என்ற சந்தேகமும், ஆர்வமும், எதிர்பார்ப்பும் எழுந்து வருகின்றன.. இதற்கு காரணம், 10 வருட ஆட்சியில் எண்ணற்ற விமர்சனங்களை பாஜக பெற்றுள்ளதுடன், இன்றைய தினம் எக்ஸிட் போல்களிலும் அது எதிரொலித்துள்ளதாகவே கணிக்கப்படுகிறது.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கோடியே 3 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், இன்றைய தினம் தேர்தல் முடிந்துள்ளது.. 1031 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், இதில், 101 பேர் பெண்கள் ஆவர். ஹரியானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

பாஜக : ஹரியானாவை பொறுத்தவரை, 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.. ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தள்-பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன என்றாலும், பாஜக VS காங்கிரஸ் கட்சிக்குள்தான் நேரடி போட்டி நடந்துள்ளதாக தெரிகிறது.
2 முறை ஆட்சி செய்ததால், பாஜக மீதான அதிருப்திகளை, தங்களுக்கான வாக்குகளாக காங்கிரஸ் தீவிரமாகி வந்தது.. அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலில் கிடைத்த கூடுதல் தொகுதிகளால் காங்கிரஸுக்கு ஹரியானாவில் எழுச்சியும் காணப்பட்டது.. இதை பாஜகவும் உணராமல் இல்லை.. அதனால்தான், எம்பி தேர்தலின்போது, மனோகர் லால் கட்டாரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நயாப் சிங் சைனியை அவசர அவசரமாக நியமித்தது.. இவர்தான் இப்போது முதல்வர் வேட்பாளராகவும் உள்ளார்..
விவசாயிகள்: ஹரியானாவை பொறுத்தவரை, ஜாட் சமூகத்தினர் அதிகமுள்ள மாநிலமாகும்.. இவர்களுக்கான ஒதுக்கீடு, விவசாயிகள் கோரிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாதை திட்டம் போன்றவை தலைதூக்கியிருப்பது பாஜவுக்கு மைனஸாக உள்ளது..
அதேபோல, சுமார் 3.09 கோடி மக்கள் வாழும் ஹரியானாவில், கடந்த 2 வருடங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.. கடந்த வருடம் CMIE வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள மாநிலம் ஹரியானா என்றும், இது தேசிய அளவிலான வேலைவாய்ப்பின்மையில் 37.4% என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
அதிருப்திகள்: அதுமட்டுமல்ல, பாஜகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து தன்னிச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பாஜக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதும் அக்கட்சிக்கு மைனஸாகிவிட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த முறை ராகுல் காந்தியின் பிரச்சாரம், பாஜகவின் இமேஜையே குலைக்கும் விதமாக இருந்தது.. "ஹரியானாவின் சுயமரியாதையை பாஜக பறித்தது" என்று ராகுல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டிருந்ததை பாஜகவே சற்று உற்று கவனித்தது.
குற்றச்சாட்டுகள் : "தேசபக்தியுள்ள இளைஞர்களின் விருப்பங்களை அக்னிவீர் திட்டம் பறித்தது, கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளின் உரிமைகளை பறிக்க முயன்றது என எண்ணற்ற ராகுல் காந்தி முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், அம்மாநில மக்கள் நேரடியாக எதிர்கொண்ட பிரச்சனைகளாகும்.. தற்போதைய ஆட்சியின் மீது முன்வைத்திருந்த புகார்கள் ஆகும்..
இவ்வளவு விமர்சனங்கள் தங்கள் மீது இருந்தபோதிலும், 90 தொகுதிகளில் 50 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் மத்திய அமைச்சர்கள் நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனினும், இதன் இறுதி ரிசல்ட் என்னாக போகிறது என்று தெரியவில்லை... காரணம், மெஜரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டியிருக்கிறது.
தோல்வி?: ஆனால், இன்றைய தினம், தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தனியார் செய்தி நிறுவனங்கள், வெளியிட்டு வரும் எக்ஸிட் போல்களை பார்த்தால், பாஜக ஹாட்ரிக் வெற்றியை எட்டாது என்றே தெரிகிறது...
பீப்பிள் பல்ஸ் Peoples Pulse என்ற செய்தி நிறுவனம் முதல், பெரும்பாலான கணிப்புகள், பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே தெரிவித்து வருகின்றன. டைனிக் பாஸ்கர் என்ற அமைப்பும், ஹரியானாவில் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளிலும், பாஜக படுதோல்வி அடையும் என்றே தெரிவித்துள்ளது. எனினும் இவையெல்லாம் ஒருவகையான கணிப்புகள் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதே நிஜ நிலவரம் தெரியவரும்.
அதேசமயம், பாஜகவுக்கு கலக்கத்தை தரக்கூடிய எக்ஸிட் போல்கள் இதுபோல் வந்ததில்லை.. இதுவரை நடந்த தேர்தலிகளின் எக்ஸிட் போல்களை எடுத்துக் கொண்டால், பாஜகவுக்கே சாதகமாக மெஜாரிட்டி கணிப்புகள் அமைந்திருக்கின்றன.. அல்லது குறைந்த அளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்புகள் காணாம்.. ஆனால், இன்றைய எக்ஸிட் போல்களில், மாநில ஆட்சிக்கு எதிரான அதிருப்திகளே, கணிப்புகளாக வெளியாகி வருவது, பாஜகவுக்கே சற்று அச்சத்தை தந்திருப்பதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications