வேலைக்கு ஆகாத வைகோவின் பிளான்.. அறிவாலயத்தில் திரண்ட மதிமுக முக்கிய புள்ளிகள்!
சென்னை: கடந்த சில நாட்களாகவே திமுக மீது கடுமையான விமர்சனத்தை அடுக்கி வந்திருந்த மதிமுக தலைவர் வைகோ, திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இப்படி இருக்கையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தற்போது திமுகவில் இணைந்திருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பல்வேறு கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றியிருக்கின்றது. குறிப்பாக தேர்தலுக்கு முன்புவரை திமுக கூட்டணியில் இருந்து ராஜ்யசபா எம்பி சீட் உட்பட.. பல ஆதாயங்களை பெற்ற காங்கிரஸ், ரிசல்ட் வெளியானவுடன் சட்டென தவெக பக்கம் தாவியது.

மதிமுக மிஸ்ஸிங்
அதேபோல விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்திருக்கின்றன. இதில் இடதுசாரிகள் தவிர மற்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் மதிமுக மட்டும்தான் மிஸ்ஸிங். சொந்த சின்னத்தில் இல்லாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால்தான் மதிமுக, திமுக கூட்டணியிலிருந்து விலக முடியவில்லை. இருப்பினும் திமுக கூட்டணியிலிருந்து விலகவே மதிமுக தொடர்ந்து முயற்சித்தது.
வைகோ மற்றும் துரை வைகோ.. இருவரும் திமுக கூட்டணியில் இருந்தபோது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வெளிப்படையாக பேசி வந்தனர்.
துரை வைகோவின் விமர்சனம்
குறிப்பாக சொந்த சின்னத்தை விட்டுவிட்டு ஏன், உதயசூரியனில் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறித்து பேசியிருந்த துரை வைகோ, வேறு வழியில்லாமல் கட்டாயத்தின் பேரில் இப்படி களம் இறங்கியிருந்தாக கூறியிருந்தார். கடைசி நேரத்தில் வந்து எங்களை கட்டாயப்படுத்தினார்கள் என்றும் தெரிவித்திருந்தார். வைகோவும் தன் பங்குக்கு திமுக மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தார்.
குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் சுயமரியாதையை இழந்து நீடிந்ததாக கூறியிருந்தார். இந்த பேச்சுக்களை உடன்பிறப்புகள் சுத்தமாக ரசிக்கவில்லை.
கூட்டணியிலிருந்து வெளியேறிய மதிமுக
இதன் தொடர்ச்சியாக மதிமுகவின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மறுபுறம் இந்த கூட்டத்திற்கு மதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. அதேபோல அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அழகுசுந்தரம், செவ்வந்தியப்பன் மற்றும் செங்குட்டுவன் சென்னை அறிவாலயத்திற்கு வந்து.. திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மதிமுகவில் அதிருப்தி
ஏற்கெனவே, மதிமுகவுக்குள் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகியிருந்த பல நிர்வாகிகள் தற்போது திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றனர். இது மதிமுகவை தவெக கூட்டணிக்குள் இணைக்கும் வைகோவின் முயற்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications